Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ காரியம் சாதிக்க தவழ்ந்து சென்றது யாரு?

காரியம் சாதிக்க தவழ்ந்து சென்றது யாரு?

காரியம் சாதிக்க தவழ்ந்து சென்றது யாரு?

காரியம் சாதிக்க தவழ்ந்து சென்றது யாரு?

ADDED : மே 22, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
'நிடி ஆயோக்' கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலினும் பதில் அளித்துள்ளார். இருவரும் மாறி மாறி வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:


கடந்த மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டங்களை தமிழகம் புறக்கணிப்பதாக வீர வசனம் பேசி, தமிழகத்தின் நியாயமான நிதி உரிமையை பெறச் செல்லாத ஸ்டாலின், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழகமா; இல்லவே இல்லை.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடிக்கு கருப்பு பலுான் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியானதும் வெள்ளை குடை காட்டினீர்களே-; அப்போது தவழ்ந்து சென்றீர்களா; ஊர்ந்து சென்றீர்களா? எது ஸ்டாலினின் கை? அண்ணா பல்கலை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிபரங்களோடு, எப்.ஐ.ஆரை 'லீக்' செய்த கை ஸ்டாலினின் கை.

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை, சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் 'சார்'களையும் பாதுகாக்கும் கை உங்கள் கை. சென்னை அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் காவல் துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்ற கை உங்கள் கை.

'யார் அந்த தம்பி?' உங்களுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்; உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் என்று சொல்கின்றனரே; அமலாக்கத்துறை சோதனை என்றதும், ஏன் அந்த தம்பி நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதை பேசுங்கள். உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார். ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். மீண்டும் கேட்கிறேன், 'யார் அந்த தம்பி?' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புலிகேசியாக மாறியது யார்? பழனிசாமிக்கு ஸ்டாலின் பதில்


முதல்வர் ஸ்டாலின்:

தமிழகத்திற்கான நியாயமான நிதி உரிமையை, நிடி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த, வரும் 24ம் தேதி டில்லி செல்கிறேன்; அமித் ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர், எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு.

நாடகங்களை வைத்து அரசியல் செய்யலாம் எனும் பகல் கனவில், அடுக்கடுக்கான பொய்களை வைத்து, பித்தலாட்ட அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு அனைத்திந்திய அளவில், பா.ஜ.,வின் பாசிச அரசியலுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர், யார் என்பதை உலகறியும்.

ஊழலில் முதுகலைப் பட்டம் பெற்று, ஊதாரி ஆட்சி நடத்தி, பா.ஜ.,விடம் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமிக்கு, டில்லி பயணம் என்றால் தவழ்ந்து செல்வது மட்டும் தானே தெரியும்.

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, இதை கண்டு ஏன் வலிக்கிறது?

'பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறி, வெள்ளைக்குடை ஏந்திச் சென்ற பழனிசாமி, என்னை பார்த்து வெள்ளைக்குடை ஏந்தியதாக பேச நா கூசவில்லையா?

இந்த ஸ்டாலினின் கை கருப்பு, சிவப்பு தி.மு.க., கொடியை ஏந்தும் கை; அண்ணாதுரையால் துாக்கி விடப்பட்ட கை; கருணாநிதியின் கரம் பற்றி நடந்த கை. எந்நாளும் உரிமைக் கொடியைத் தான் ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்.

இன்றைக்கு கூட, தமிழகத்தின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்திற்கான நிதியை போராடி பெறுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us