'வாய் திறக்க' போகும் செங்கோட்டையனால் என்ன நடக்கும்?
'வாய் திறக்க' போகும் செங்கோட்டையனால் என்ன நடக்கும்?
'வாய் திறக்க' போகும் செங்கோட்டையனால் என்ன நடக்கும்?
ADDED : செப் 03, 2025 04:17 AM

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “வரும் 5ம் தேதி மனம் திறப்பேன்,” என அறிவித்திருப்பது, அக்கட்சியில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.
பழனிசாமி அமைச்சரவையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செயல்பட்ட செங்கோட்டையன், கட்சித் தலைமைக்கு எதிராக வெளிப்படையாக பேசும் வழக்கம் இல்லாதவர்.
ஆனால், கடந்த மார்ச் 9ம் தேதி, கோவை அன்னுாரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக்கூறி, அவ்விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
அதைத் தொடர்ந்து, ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் பழனிசாமியை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். கடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரிலும், இருவரும் சந்திப்பதை தவிர்த்தனர்.
கடந்த மார்ச் மாதம் டில்லியில் அமித் ஷாவை சந்தித்தார் பழனிசாமி. அடுத்த சில நாட்களிலேயே செங்கோட்டையனும் அமித் ஷாவை சந்தித்தார்.
இதனால், செங்கோட்டையனை வைத்து, அ.தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ., முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், கடந்த ஏப்ரல் 11ல் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டதும், செங்கோட்டையன் அமைதியானார்.
இந்நிலையில், ஐந்தரை மாதங்களுக்கு பின், மீண்டும் பழனிசாமி மீதான தன் அதிருப்தியை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்.
ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் 5ம் தேதி, கோபிச்செட்டிப்பாளையம் அ.தி.மு.க., அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன்,” என்றார்.
இது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார பயணத்தை பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தன்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை; ஒரு வார்த்தைகூட ஆலோசனை கேட்கவில்லை' என்ற வருத்தம் செங்கோட்டையனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
போனால் போகட்டும் என்பது போல பழனிசாமி நடந்து கொள்வது, அவரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அதனால்தான், மீண்டும் புயலை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கோபிச்செட்டிப்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு நேற்று சென்ற செங்கோட்டையன், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையில், பவானிசாகர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பண்ணாரி, ஈரோடு மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, 16 ஒன்றிய செயலர்கள், மூன்று நகர செயலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தி.மு.க., அழைப்பு!
கொங்கு மண்டலத்தில் தி.மு.க.,வை வலுப்படுத்தும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுக்கு அக்கட்சி வலை வீசி வருகிறது. ஈரோடு மாவட்ட தி.மு.க.,வில், அமைச்சர் முத்துசாமியை தவிர ஆளுமைமிக்க மாவட்டச் செயலர்கள் இல்லை என்ற குறை உள்ளது. அக்குறையை போக்கும் வகையில், தி.மு.க.,வில் இணைய செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; 'பவர்புல்' அமைச்சர் பதவி உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.