வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை
வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை
வெள்ளியங்கிரி மலையில் என்னதான் நடக்கிறது? இந்தாண்டு ஏழு பேர் பலி: மருத்துவ வசதி மேம்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 06:41 AM

தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், இந்தாண்டு சீசனில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, கட்டுப்பாடுகளை அதிகரிப்பதோடு, அவசர சிகிச்சை மருத்துவ வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள, தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர்.
இந்தாண்டு, பிப்.,1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற, வனத்துறையினர் அனுமதித்தனர். வழக்கமாக மே 31ம் தேதி வரை அனுமதிக்கப்படும் நிலையில், தொடர் கனமழையின் காரணமாக, இந்தாண்டு, மே 25ம் தேதியுடன், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது.
இந்தாண்டில் 7 பேர் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலை, 5.5 கி.மீ., தொலைவு கொண்ட, 7 மலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்திலிருந்து, சுமார் 6 ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலையில், 7 மலைகளும், ஏழு விதமான இடங்களாக உள்ளது. இந்தாண்டு மலை ஏறிய ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் மற்றும் தடுப்பதற்கான வழி என்ன என்பது குறித்து மலைவாழ் மக்களிடம் கேட்டபோது, '7 மலைகளும், ஒரேபோல இல்லை. ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு கால நிலையில் இருக்கும். மலையேறுபவர்கள், முழு உடற்தகுதி கொண்டு இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், உடல் உழைப்பு இல்லாத பணி மேற்கொள்பவர்களுக்கு, இது சிரமமானது.
மருத்துவ வசதி
அடிவாரத்தில், மலையேறும் இடத்துக்கும், மருத்துவ முகாம் அமைந்துள்ள இடத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. படிக்கட்டுப் பாதையில் வனத்துறையினர் சோதனை செய்யும் இடத்தில், மருத்துவ முகாம் அமைத்து, மலையேறுபவர்களை, சோதனை செய்து அனுப்ப வேண்டும்.
7 மலைகளில், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆறாவது மலைதான் மிக சிரமமான மலை. இம்மலைகளிலேயே பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், இம்மலைகளிலும், மருத்துவ முகாம்கள் அமைத்தால், முதலுதவி செய்து, பெரும்பாலான உயிரிழப்புகளை தடுக்கலாம்.
அதோடு, கன மழையால், மலைப்பாதை மிகவும் மோசமாகியுள்ளது. பாறைகளில் அரிப்பு ஏற்பட்டு, கால் வைப்பது சிரமமாக உள்ளது. மரங்களின் வேர்கள் பாதையில் இருப்பதால், அதில், கால் சிக்கி பலரும் விழுகின்றனர்.
7வது மலையில், பலகார மேடை அருகே உள்ள பாதை மிகவும் மோசமானது. அதில், இறங்கும் பலரும் அடிபடுகின்றனர். ஏழு மலைகளிலும் மலைப்பாதைகளை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.