மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணம் கேட்டு அலைக்கழிப்பு
மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணம் கேட்டு அலைக்கழிப்பு
மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணம் கேட்டு அலைக்கழிப்பு
ADDED : ஜூன் 03, 2025 05:03 AM

சென்னை : ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறொருவரின் பெயருக்கு மாற்ற சொத்து வரி ரசீது, 'நோட்டரி கடிதம்' உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு, மின் வாரிய அலுவலகங்களில் அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
உரிமையாளர் மறைவு மற்றும் சொத்து விற்பனை காரணமாக, வீடு, கடைகளின் மின் இணைப்பு, வேறு நபரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த சேவைக்கு, மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
புகார்
உயிரிழந்த நபரின் பெயரில் உள்ள மின் இணைப்பை மாற்ற, தாசில்தார் அலுவலகத்தில் வழங்கப்பட்ட வாரிசு சான்று, மற்ற வாரிசுகளின் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சொத்து விற்கப்பட்டால், புதிய உரிமையாளருக்கு சொத்து மாறிய கிரைய பத்திரம், பழைய உரிமையாளர் மின் இணைப்பிற்கு செலுத்திய வைப்பு தொகையை, புதிய உரிமையாளருக்கு மாற்றி தரும் ஒப்புதல் கடிதம் பதிவேற்றப்பட வேண்டும். இவற்றுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.
தற்போது, தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு பெயர் மாற்ற, 645 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், பல அலுவலகங்களில், சொத்து வரி செலுத்திய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் கேட்டு, அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
லஞ்சம்
இதுகுறித்து, மின் நுகர்வோர்கள் கூறியதாவது
மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்தாலும், அந்த சேவையை செய்து தருவதில்லை. விற்பனை பத்திரம், நோட்டரி கடிதம், வரி செலுத்திய ரசீது, ஆதார் நகல், சமையல் காஸ் சிலிண்டர் ரசீது கேட்கின்றனர்.
உடனே சேவையை செய்து தர, லஞ்சமும் கேட்கின்றனர். எனவே, என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்ற விபரத்தை, மின் வாரியத்தின் அனைத்து அலுவலகத்திலும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.