குடும்ப ஆதிக்கமற்றவர் அண்ணாதுரை; தி.மு.க.,வை மீண்டும் கடுப்பேற்றிய விஜய்
குடும்ப ஆதிக்கமற்றவர் அண்ணாதுரை; தி.மு.க.,வை மீண்டும் கடுப்பேற்றிய விஜய்
குடும்ப ஆதிக்கமற்றவர் அண்ணாதுரை; தி.மு.க.,வை மீண்டும் கடுப்பேற்றிய விஜய்

சென்னை: 'தேர்தல் அரசியலில், அசாத்திய வியூகம் வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்தவர் அண்ணாதுரை' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், முப்பெரும் விழாவுக்காக, தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, நேற்று முன்தினம் கடுமையான அறிக்கை வெளியிட்டார்.
அதில், 'வெறுப்பையும், விரக்தியையும் வடிவமைத்த வார்த்தைகள், முதல்வரின் கடிதத்தில் அழுது கொண்டிருப்பதாகவும், வெறுப்பை கக்கினாலும் முன்னேறுவோம் எனவும் விஜய் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தி.மு.க.,வினரை மீண்டும் கடுப்பேற்றும் வகையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, நேற்று விஜய் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, மாநில உரிமைக்காக ஓங்கி குரல் எழுப் பியவர்; இருமொழி கொள்கையை தமிழகத்திற்கு தந்தவர்; 'தமிழ்நாடு' என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்; சமூக நீதியை கொள்கையாக கொண்டவர்; சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியவர்.
குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர்; கொள்கை வழி நின்றவர்.
இரட்டை வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றாமல், அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் அண்ணாதுரை. தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, தமிழகத்தில் மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்தவர்.
அவர் பிறந்த நாளில், 'மக்களிடம் செல்' என்ற அவரது அரசியல் மந்திரத்தை பின்பற்றி, மக்கள் ஆதரவுடன், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்ட உறுதி ஏற்போம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
தி.மு.க., பற்றி பேசினால் தான் அடையாளம் கிடைக்கும்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தி.மு.க.,வை தொடர்ந்து தாக்கி, விமர்சிக்கிறார். அரசியலுக்கு புதிதாக யார் வந்தாலும் தி.மு.க., பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று. அதனால் தான், அவர்கள் எப்போதும் தி.மு.க.,வை விமர்சிக்கின்றனர். தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாக, தமிழகத்தின் சிந்தனையையும், அரசியல் போக்கையும் மாற்றி அமைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. அவரது கருத்துகளின் வழியில், தி.மு.க., ஆட்சி நடைபெறுகிறது.
- கனிமொழி, துணை பொதுச்செயலர், தி.மு.க.,