Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கோவையில் முப்பெரும் விழா: புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் மக்களிடம் அதிருப்தி

கோவையில் முப்பெரும் விழா: புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் மக்களிடம் அதிருப்தி

கோவையில் முப்பெரும் விழா: புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் மக்களிடம் அதிருப்தி

கோவையில் முப்பெரும் விழா: புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் மக்களிடம் அதிருப்தி

ADDED : ஜூன் 14, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதற்கு, கோவையில் முப்பெரும் விழா நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருப்பது இங்குள்ள மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கான வெற்றி விழா, கருணாநிதி நுாற்றாண்டு விழா, முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா என முப்பெரும்விழா, கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு செய்து வருகின்றனர்.

இவ்விழாவை கோவையில் கொண்டாடுவதற்கு, முதல்வர் ஸ்டாலின் ஒரு காரணமும் தெரிவித்துள்ளார். மேற்கு மண்டலத்தை தங்களுடைய பட்டா நிலம் போல நினைத்துக் கொண்டு, மக்களை வஞ்சித்து வந்ததை உணர்ந்து தங்களை வெற்றி பெற வைத்திருப்பதால், கோவையில் முப்பெரும் விழா நடத்துவதாக அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்த காலத்திலிருந்து, லோக்சபா தேர்தல்களில், தி.மு.க.,வும், சட்டமன்றத் தேர்தல்களில் இங்குள்ள பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வெற்றி பெறுவது தொடர்ந்து வருகிறது. அதிலும் கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க., பலத்த அடி வாங்கி வருகிறது.

இதை மாற்றும் முயற்சியாகத்தான், கோவையில் கடந்த 2010ல் செம்மொழி மாநாட்டை அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் அதன்பின்பு தான், 2011 தேர்தலில் தி.மு.க., தோற்றது; மீண்டும் பத்தாண்டுகள் ஆட்சிக்கு வரவே முடிய வில்லை. இப்போது முதல்வர் ஸ்டாலினும், சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து, கோவையில் முப்பெரும்விழாவை அறிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பு, கோவையிலுள்ள ஆளும்கட்சிக்காரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையைத் தோற்கடித்த ஒரே காரணத்திற்காகவே, கோவையில் விழாவை நடத்துவதாக தி.மு.க., நிர்வாகிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இங்கு இந்த விழாவை நடத்துவதால், மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்குமென்று அச்சமும் அவர்களிடம் உருவாகியுள்ளது.

ஏனெனில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் கடந்த மூன்றாண்டுகளாக, கோவையில் எந்தவொரு புதிய திட்டமும் பெரிதாகத் துவக்கப்படவில்லை. மேற்கு புறவழிச்சாலைத் திட்டம், செம்மொழிப் பூங்கா பணிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பாலங்கள், இப்போது கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படுகின்றன. இவை எல்லாமே பழைய திட்டங்கள் தான்.

ஆனால் இந்த ஆட்சிக்காலத்தில் புதிதாக எந்தவொரு திட்டமும் கோவைக்கு அறிவிக்கப்படவில்லை. மெட்ரோ ரயிலுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும், முதற்கட்டப்பணிக்குக் கூட இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. வெள்ளலுாரில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், அரைகுறையாக நிற்கிறது. புதிய பஸ் ஸ்டாண்டுக்கான இடமும் தேர்வு செய்யப்படவில்லை.

லாலி ரோடு சந்திப்பு மேம்பாலம், மருதமலை ரோடு விரிவாக்கம், அவினாசி ரோடு பாலம் நீட்டிப்பு கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. உக்கடம் மேம்பாலம் கட்டி முடிக்கும் முன்னே, அதிலுள்ள குறுகிய அணுகுபாதைகள் அச்சத்தை விளைவிக்கின்றன; கோவையில் மற்றொரு பல்நோக்கு அரசு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி.,ஆபீஸ், வருவாய் கோட்டாட்சியர், தாலுகா அலுவலகங்கள் பல புதிதாகக் கட்டப்பட்டன. இப்போது குறுகலான இடத்திலுள்ள மாநகராட்சி அலுவலகத்தை வேறிடத்தில் பெரிதாகக் கட்ட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் உள்ளது. ஆனால் அதற்கும் எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை.

எல்லாவற்றையும் விட, விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனையைத் தளர்த்த வேண்டுமென்று, கோவை தொழில் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன. அதுபற்றியும் அரசிடமிருந்து பதில் இல்லை; இந்நிலையில், கோவையில் முப்பெரும்விழா நடத்தும் முதல்வர் ஸ்டாலின், கோவை மக்களை மகிழ்விக்கும் வகையில், திட்டங்களை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இவற்றில் சில திட்டங்களையாவது அறிவித்து நிறைவேற்றுவதே, கோவை மக்களுக்குக் கூறும் உண்மையான நன்றியாக இருக்கும்!

-நமது சிறப்பு நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us