Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம்!: சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தது தேர்தல் கமிஷன்

பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம்!: சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தது தேர்தல் கமிஷன்

பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம்!: சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தது தேர்தல் கமிஷன்

பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம்!: சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தது தேர்தல் கமிஷன்

UPDATED : செப் 02, 2025 02:12 PMADDED : செப் 02, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
'பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்குப் பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், ஏதேனும் திருத்தங்கள், ஆட்சேபனைகள், உரிமை கோரல்கள் இருந்தால், செப்., 1ம் தேதி காலக்கெடுவுக்கு பிறகும் தெரிவிக்கலாம்' என, தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதே சமயம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டப் பிறகே திருத்தங்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளது.

பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

இதையொட்டி, கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு, மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேரின் பெயர்களை நீக்கியது.

உத்தரவு

நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர் மற்றும் இரு வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என நீக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கியது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், செப்., 1ம் தேதிக்குள் ஆட்சேபனைகள், திருத்தங்கள் தெரிவிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. அதில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தன.

இந்நிலையில், தேர்தல் கமிஷனின் காலக்கெடு செப்., 1ம் தேதியான நேற்று முடிந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு முன் எதிர் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் ஷோயப் ஆலம் ஆஜராகி வாதாடினர்.

அப்போது, 'வரைவு வாக்காளர் பட்டியலில் 7.24 கோடி வாக்காளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க ஆதாரையும் ஒரு ஆவணமாக கருத உத்தரவிட வேண்டும்' என தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. எனினும், குடியுரிமை மற்றும் வசிப்பிடத்திற்கான ஆவணமாக ஏற்க முடியாது என, ஆதார் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை மீறி, ஆதாருக்கு எந்த வகையிலும் மேம்பட்ட சட்ட அந்தஸ்தை வழங்க முடியாது' என தெரிவித்தனர்.

அடுத்த விசாரணையின்போது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் விவகாரத்தில் ஆதாரை ஆவணமாக பரிசீலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், நிச்சயம் அதை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

காலக்கெடு

இதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி முன்வைத்த வாதம்: செப்., 1ம் தேதிக்கு பின் காலக்கெடுவை நீட்டித்தால், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தாமதம் ஆகும். விதியின் படியே ஆட்சேபனைகள், திருத்தங்கள், உரிமைகளை கோருவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக அதிகபட்சமாக 30 நாட்கள் வரை அவகாசம் தரப்பட்டது.மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில், 99.5 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வாக்காளர் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது. செப்., 25ம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வாக்காளர் பட்டியல் தொடர்பாக உரிமை கோரல்கள், ஆட்சேபனைகள், திருத்தங்கள் இருந்தால் செப்., 1ம் தேதி காலக்கெடுவுக்கு பிறகும் தெரிவிக்கலாம் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. எனவே, இதன் பிறகும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

எனவே, உரிமை கோரல்கள், ஆட்சேபனைகள், திருத்தங்கள் இருந்தால் அதுவரை வாக்காளர்கள் தெரிவிக்கலாம். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் முழு சுதந்திரம் வழங்குகிறது.

தன்னார்வலர்கள்

பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கமிஷன் இடையிலான நம்பிக்கை பற்றாக்குறையால் ஏற்பட்ட பிரச்னை என்பதாகவே உச்ச நீதிமன்றம் கருதுகிறது. எனவே, தனிப்பட்ட வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கும் ஆட்சேபனைகள் மற்றும் உரிமை கோரல்களை விண்ணப்பிக்க, சட்ட சேவை தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என, மாநில சட்ட சேவை ஆணையத்திற்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

சட்ட சேவை தன்னார்வலர்கள் தங்களது ரகசிய அறிக்கையை மாவட்ட நீதிபதிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் மொத்தமாக தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் செப்., 8ம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-டில்லி சிறப்பு நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us