Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/அந்த 45 நாட்கள்... எம்.எஸ்.எம்.இ., 'பேமண்ட்' கவனம் செலுத்துங்கள்!

அந்த 45 நாட்கள்... எம்.எஸ்.எம்.இ., 'பேமண்ட்' கவனம் செலுத்துங்கள்!

அந்த 45 நாட்கள்... எம்.எஸ்.எம்.இ., 'பேமண்ட்' கவனம் செலுத்துங்கள்!

அந்த 45 நாட்கள்... எம்.எஸ்.எம்.இ., 'பேமண்ட்' கவனம் செலுத்துங்கள்!

ADDED : பிப் 11, 2024 07:47 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நாட்டில் அமலில் உள்ள தொழில் சட்ட, திட்டங்கள், நேரடி மற்றும் மறைமுக வரிகளில் செய்யப்படும் மாற்றங்கள், வரி அடுக்குகளின் நிலைகள், மத்திய, மாநில அரசுகளின் தொழிற்துறை தொடர்பான அறிவிப்புகள், வரித்துறை அறிவிப்புகள், சலுகைகள் போன்றவற்றை தொழில் முனைவோர் உன்னிப்பாக கவனித்து புரிந்து கொண்டால், அதிக வரிவிதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்; லாபத்தையும் அதிகரிக்கலாம்.

சமீப வருமான வரிச்சட்ட மாற்றத்தில், குறு, மற்றும் சிறு தொழில் தொழில்துறையினரிடம் பொருட்கள் அல்லது சேவையை வாங்கிவிட்டு உரிய நேரத்தில் 'பேமண்ட்' செலுத்தாத நிறுவனங்கள், தங்களின் கொள்முதல் தொகையை செலவுகணக்கில் காட்டமுடியாது.. அது வருமான வரிக்குட்பட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. .

அதுபற்றி விரிவாக பார்ப்போம்:

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக, கொரோனா பெருந்தொற்றுக்குப்பிறகு, மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டத்தில், 2020ம் ஆண்டு குறு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான வரையறை ரூ.1 கோடி முதலீடு எனவும், விற்றுமுதல் ரூ.5 கோடி எனவும் உயர்த்தப்பட்டது. சிறு நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடி முதலீடு மற்றும் ரூ.50 கோடி விற்றுமுதல் என உயர்த்தப்பட்டது. அதேபோல, நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.50 கோடி முதலீடு மற்றும் ரூ.250 கோடி விற்று முதல் என அதிகரிக்கப்பட்டது.

மேலும், ஏற்றுமதி வகையிலான விற்றுமுதல்கள், குறு, சிறு அல்லது நடுத்தர நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும், எந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்தின் விற்றுமுதல் வரம்பில் சேர்க்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டது.

49 சதவீதம்


உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.200 கோடி வரையிலான கொள்முதல்களுக்கு உலக அளவிலான டெண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 'எம்.எஸ்.எம்.இ.,' நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

மேலும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வைத்துள்ள நிலுவை தொகைகளை 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிடப்பட்டது.

45 நாட்கள் என்ற கெடுவுக்குள் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு, அமைச்சரவைச் செயலர், செலவினங்கள் பிரிவு செயலர் மற்றும் எம்.எஸ்.எம்.இ. செயலர் அளவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இவை அனைத்தையும் நிர்வகிப்பதற்கு சாம்பியன்ஸ் எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஒரு முறைமையை 'எம்.எஸ்.எம்.இ.,' அமைச்சகம் தொடங்கியது. இது தவிர, 45 நாட்களுக்கு பிறகு கொடுக்கபடும் தொகைக்கு வங்கி வட்டிவிகிதத்தில் மூன்று மடங்கு வட்டியாகக்கொடுக்க வேண்டும் என்கிற சட்டமும் உள்ளது. இந்த வட்டித்தொகை வருமான வரிக்கழிவு பெறாது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), முதலிடத்தில் விவசாயமும், 2வது இடத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையும் உள்ளன. மேலும், இந்தியாவின் ஏற்றுமதியிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை முதலிடத்தில் உள்ளது. உற்பத்தித் துறையில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்கு இன்று 33 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியில் 49 சதவீதத்தை 'எம்.எஸ்.எம்.இ.,' துறையினர் பங்களிக்கின்றன

ரூ.10.7 லட்சம் கோடி


சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டத்தின் படி, உதயம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டு, 'எம்.எஸ்.எம்.இ.,' தொழில்துறையில் இருந்து ஏதேனும் பொருட்களை வாங்கும் அல்லது ஏதேனும் சேவையைப் பெறும் எந்தவொரு வாங்குபவரும், ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் அல்லது அதற்கு முன்பு பணம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்ட தேதி, ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் அல்லது நாளிலிருந்து 45 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்புக்கொள்ளப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை என்றால், 15 நாட்களுக்கு அல்லது அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும்.

ஆனால் நடைமுறையில், மூலப் பொருட்களைக் கொள்முதல் செய்த பிறகு 180 நாட்கள் வரை 'எம்.எஸ்.எம்.இ.,' நிறுவனங்களுக்கு பணம் தரப்படாத சம்பவங்களும் உள்ளன. இதனால், போதிய பணமின்றி ஏராளமான சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முடங்கி வருகின்றன. பணம் செலுத்துதல் இப்படி தாமதமாவதால், ஒரு வருடத்துக்கு ரூ.10.7 லட்சம் கோடி பணம் முடங்குவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

'எம்.எஸ்.எம்.இ.,' நிறுவனங்களுக்கு உயிர் கொடுக்க மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினாலும், இன்னொரு புறம், கொள்முதல் நிறுவனங்களுக்கான சிக்கல்களும் இருக்கின்றன.

புதிய விதி


கடந்த 2023 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய நிதி சட்டத்தின் 43பி பிரிவின் படி, 'சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு 45 நாட்களுக்குள் பணம் தரப்படவில்லை என்றால், அந்த தொகையை, வருமான வரி தாக்கலின்போது, செலவு கணக்கில் காட்ட முடியாது. அந்தப் பணத்துக்கும் வருமான வரி விதிக்கப்படும். கொடுக்கப்படும் ஆண்டு வரிக்கழிவு பெறும்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், பெரிய நிறுவனங்கள் உரிய நேரத்தில் பணம் தராமல் போவதால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நசிந்து போகாமல் இருக்கவும், இப்படி ஒரு புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்தது.

ஆகவே, 'எம்.எஸ். எம். இ.,' நிறுவனங்களிடம் கொள்முதல் செய்திருக்கும் பெரிய நிறுவனங்கள், உரிய நேரத்தில் 'பேமண்ட்' செலுத்துவதில் கவனம் செலுத்தவும். அவ்வாறு செலுத்தாத நிறுவனங்கள், நிதியாண்டின் வருமான வரி படிவங்கள் தாக்கலின்போது, கொள்முதல் தொகையை, தங்களது செலவு கணக்காக, வருமான வரிச்சட்டம் 43பி (ஹெச்) இன் கீழ் செலவுகணக்கில் காட்ட முடியாது.

முக்கியமான தருணம்


இதை ஏற்கனவே கவனத்தில் கொண்டு, உரிய தேதிகளில் கொள்முதல் தொகை செலுத்தியவர்களுக்கு பிரச்னை இருக்கப்போவதில்லை. நிதியாண்டு நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கிறது. ஆகவே இது முக்கியமான தருணம். 'எம்.எஸ்.எம்.இ.,' நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்துப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்வது வரிச்செலவைக் குறைக்கும். முதலில் உங்கள் சப்ளையர் எம்.எஸ்.எம்.இ அமைப்பில் பதிவு செய்யப்பட்டவரா என்பதற்கான ஆதாரங்களைப்பெற்று க்கொள்ள வேண்டும்.

இந்த விதிகள், பொருட்களை வாங்கி, விற்கும் வணிகர்களுக்கு பொருந்தாது. 'எம்.எஸ்.எம்.இ.,' உதயம் போர்ட்டலில் பதிவு செய்த குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

இதை நினைவில் கொண்டு 'எம்.எஸ்.எம்.இ.,' நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையினை உரிய காலத்தில் வழங்க வேண்டும். அதில் கவனக்குறைவு ஏற்பட்டால், பொருள் வாங்கிய நிறுவனம் அதிகப்படியான வருமான வரி கட்டும் நிலைக்கு தள்ளப்படலாம். உங்கள் நிறுவனம் குறு அல்லது சிறு தொழில் அமைப்பாக இருந்தால், நீங்கள் வசூல் செய்ய வேண்டிய தொகைக்கும் இந்த சட்டத்தின் மூலம் பலனைப்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us