ஈ.வெ.ரா.,வுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: அன்புமணி
ஈ.வெ.ரா.,வுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: அன்புமணி
ஈ.வெ.ரா.,வுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: அன்புமணி
ADDED : செப் 21, 2025 05:41 AM

தஞ்சாவூர்: 'ஈ.வெ.ரா.,வுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது,' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 'உரிமை மீட்க; தலைமுறை காக்க' நடைபயணத்தை, பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிப்போம் என பொய்யான வாக்குறுதி அளித்தார், முதல்வர் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு காலம் ஆகிறது, அதற்கு ஒரு முயற்சிகூட எடுக்கவில்லை. தற்போதைய தி.மு.க., ஆட்சியில், ஒரு மாவட்டம்கூட புதிதாக உருவாக்கப்படவில்லை.
அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி, ஆட்சியில் இருந்தபோது 11 புதிய மாவட்டங்களை அறிவித்தார். எல்லாமே நிர்வாக வசதிக்காக செய்யப்பட்டவை தான். அதனால், அப்பகுதி மக்கள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். மக்கள் வசதி குறித்து தி.மு.க., எப்போதும் கவலைப்படுவதில்லை. தங்கள் வசதி குறித்துத்தான் கவலைப்படுவர்.
நான் ஒரு வாக்குறுதியை கொடுத்து விட்டு நிறைவேற்றா விட்டால், மக்களை சந்திக்க முடியாமல் தலை குனிந்து நிற்பேன். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்கள், வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும், பொய் சொன்னாலும், ஒன்றுமே நடக்காதது போன்று நடிக்கின்றனர். இது அவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.
ஆட்சி நிர்வாகம் செய்ய தகுதியற்றவர் முதல்வர் ஸ்டாலின். விவசாயிகளுக்கு 56 வாக்குறுதிகளை அளித்துவிட்டு, வெறும் 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளார்.
இப்படி பொய் மேல் பொய் சொல்லி, தமிழக விவசாயிகளை ஏமாற்றி இருக்கும் தி.மு.க.,வுக்கு தமிழக விவசாயிகள் ஒருவர் கூட ஓட்டுப் போடக் கூடாது. அதற்காக, அவர்கள் உடனே சபதம் எடுக்க வேண்டும். அதுபோல, பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், அவர்களும் தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க கூடாது.
கிராமங்களிலும் போதை மாத்திரை, போதை ஊசிகள் கிடைக்கிறது. இதை சிறுவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த கேவலமான கலாசாரம் தி.மு.க.,வால் தான் வந்தது.
ஈ.வெ.ராவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஈ.வெ.ரா., அண்ணாதுரை பெயரை பயன்படுத்த ஸ்டாலின் தகுதியற்றவர்.
அவருக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை. வரும் டிச., 15ல், இட ஒதுக்கீட்டிற்காக சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம். வன்னியர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு கேட்போம். ஆட்சி மாற்றத்துக்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்