Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/யானை வழித்தடம்: அரசின் அறிவிப்பும், அரசியல் எதிர்ப்பும்

யானை வழித்தடம்: அரசின் அறிவிப்பும், அரசியல் எதிர்ப்பும்

யானை வழித்தடம்: அரசின் அறிவிப்பும், அரசியல் எதிர்ப்பும்

யானை வழித்தடம்: அரசின் அறிவிப்பும், அரசியல் எதிர்ப்பும்

UPDATED : ஜூன் 02, 2024 01:46 AMADDED : ஜூன் 02, 2024 01:45 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தமிழகத்தில் ஒரு வழக்கு காரணமாக, யானை வழித்தடங்கள் மறு ஆய்வு செய்யப்படுகின்றன. அதில், வழித்தடங்களை விரிவாக்கவும் பாதுகாக்கவும் பரிந்துரை வெளியாகி உள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தில், ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் மலையோர கிராம மக்களின் எதிர்ப்புமாக, பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆளும்கட்சிக்கு எதிரான அரசியலாகவும் மாறி வருகிறது. இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

நம் நாட்டில் 29,000 யானைகள், நாட்டின் மொத்த பரப்பில் மூன்று சதவீத பகுதியில் வாழ்வதாக மத்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் மட்டும் 2,961 யானைகள் இருப்பதாக, கடந்த ஆண்டு கணக்கெடுக்கப்பட்டது.

யானைகள், நம்மை போல் ஒரே இடத்தில் நிலையாக வழ்வதில்லை. குறிப்பிட்ட காடுகளுக்கு இடையே, உணவு உள்ளிட்ட தேவைக்கு ஏற்ப போய்வந்துகொண்டு இருக்கும். இப்படி அவற்றின் வாழ்விடங்களுக்கு இடையே அவை போய்வரும் பாதை யானை வழித்தடம் எனப்படுகிறது.

Image 1276474
வன ஆக்கிரமிப்பு, விவசாய நில விரிவாக்கம், நீர்மின் திட்டங்கள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட காரணங்களால், இந்த பாதைகளில் பல தடைகள் உருவாகி உள்ளன. இதனால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் யானைகள் வருவது அதிகரித்து, மனித--விலங்கு மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதனால், மனிதர்கள் மட்டுமல்லாது யானைகளும் இறந்து வருகின்றன. இப்படிப்பட்ட செய்திகள் நம் நாளிதழில் மாதம் ஓரிரு முறையாவது வெளியாகின்றன.

1,160 யானைகள் பலி


இந்தியாவில், 2010 - 2020 இடையிலான ஆண்டுகளில், இயற்கையாக அல்லாமல், 1,160 யானைகள் உயிரிழந்து உள்ளன. இவற்றில், 64 சதவீதம் மின்சாரம் பாய்ந்து பலியாகின. ரயில் விபத்து, வேட்டை, விஷம் வைத்தல் ஆகிய காரணங்களால், மீதமுள்ள யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் யானை பாதுகாப்பு திட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்கள் அதிகம் நடப்பது கொங்கு மண்டலத்தில் தான்.

வனத்துறை புள்ளி விபரப்படி, கடந்த 2011 - 2022 இடையேயா ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்தில், பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்ததில், 109 யானைகள், மனித செயலால் பலியாகின. அதே நேரம், அந்த கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில் மட்டும் யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில், 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே பலியாகி உள்ளனர்.

Image 1276476
மோதலும், உயிரிழப்புகளும், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில் தான் அதிகமாகி உள்ளன. அதற்கு காரணம், காலம், காலமாக யானைகள் வந்த வலசை பாதைகள் திடீரென அடைபட்டிருப்பது தான்.

யானைகள் பெரும்பாலும் சமவெளி அல்லது ஆபத்தில்லாத மலைச்சரிவுகளில் தான் தங்கள் பாதையை அமைத்துக் கொள்கின்றன. தமிழகத்தில் பெரும்பாலும் மலைப்பகுதிகள் மட்டுமே, வனப்பகுதிகளாகவும், அதையொட்டியுள்ள சமவெளிப்பகுதிகள் பட்டா நிலங்களாவும் உள்ளன. முன்பு, மலையை ஒட்டிய பகுதிகளில் யாரும் விவசாயம் செய்ததில்லை; குடியிருந்ததில்லை.

அந்த சமவெளி பகுதிகளில் தான், யானைகள் ஆண்டாண்டு காலமாக கடந்து சென்று கொண்டிருந்தன. இப்போது யானை வழித்தடங்களில் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், ரிசார்ட்கள், வாட்டர் தீம் பார்க், குடியிருப்புகள் மற்றும் பெரும் தோட்டங்கள் முளைத்துள்ளன.

வழக்கு


இந்த சூழலில் தான், சென்னையை சேர்ந்த வன உயிரின ஆர்வலர் முரளிதரன், கோவை, தடாகம் பள்ளத்தாக்கில் சட்ட விரோதமாக இயங்கிய செங்கல் சூளைகளுக்கு எதிராக, 2019ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

சூளைகள், அவற்றுக்காக யானை வழித்தடங்களில் நடக்கும் மண் கொள்ளையால், காட்டு யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, அவற்றை மூட உத்தரவிட கோரியிருந்தார். 'அது யானைத்தடமே இல்லை' என்ற வாதம் எழுந்த போது தான், தமிழகத்திலுள்ள யானை வழித்தடங்களை அடையாளம் காண, வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்திலுள்ள யானை வழித்தடங்களை கண்டறிய, வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் தலைமையில், தமிழக அரசு குழு அமைத்தது. குழுவில், யானை ஆராய்ச்சியாளர்கள் ராமன் சுகுமாரன், பூமிநாதன், ஆனந்தகுமார், தார்ஷ் தாக்ரே ஆகியோர் இடம் பெற்றனர்.

அக்குழு, பல்வேறு ஆய்வுகளை நடத்தி, அவற்றின் அடிப்படையில், 42 யானை வழித்தடங்கள் தமிழகத்தில் இருப்பதாக கணக்கிட்டு, 161 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை ஏப்ரலில் வெளியிட்டது.

இந்த வரைவை அரசு அங்கீகரிக்கும் பட்சத்தில், யானை வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்படும்; கட்டடங்கள் அகற்றப்படும்; குடியிருப்புகள் இடம் மாற்றப்படும்.

இதனால், இந்த வழித்தடங்களை மறு ஆய்வு செய்ய வேண்டுமென, மாறுபட்ட கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சியினர் கூட அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, வழித்தடங்களின் கணக்கு அதிகரித்துள்ளதும் பிரச்னையை கிளப்பி உள்ளது.

எதிர்ப்பு பின்னணி


தமிழகத்தில், இந்த வழக்கு வரும் வரை, யானை வழித்தடங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு எடுக்கப்படவே இல்லை. தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனி ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் தான், யானை வழித்தடம் என்பது வனத்துறையால் இதுவரை அடையாளம் காணப்பட்டு உள்ளது.

அதனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபட்ட கணக்கே இருந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 25, 2017ல் - 18, 2023ல் - 20 வழித்தடங்கள் இருந்ததாக வனத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 20 யானை வழித்தடங்களில், 15 தமிழகத்துக்குள்ளும், ஐந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் சேர்ந்து அமைந்துள்ளன. தமிழக வனத்துறை அமைத்த குழு, இதை 42 ஆக உயர்த்தியுள்ளது.

ஆனால், இந்த உயர்வு துல்லியமான ஆய்வின் அடிப்படையில் தான் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. பாலக்காடு கணவாயின் வடக்கு மற்றும் தெற்கு என இரு பகுதிகளாக பிரித்து, நவீன தொழில்நுட்ப உதவியுடனே (ஜி.ஐ.எஸ்., மேப்பிங்) இந்த யானை வழித்தடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களுக்கு, தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்தும் கொள்கை ரீதியான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

யானை வழித்தட அறிக்கை வரைவில், ஒவ்வொரு வழித்தடத்துக்கான நீளம், அகலம், தேவைப்படும் நிலப்பரப்பு, அதில் அமைந்துள்ள கோவில்கள், குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள், ரிசார்ட் உள்ளிட்ட கட்டடங்கள் போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

மருதமலை, அனுவாவி சுப்ரமணியர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி கோவில் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்வதற்கும் தடங்கல் ஏற்படும். இதற்கு ஏதேனும் ஏற்பாடு செய்யலாம்.

ஆனால், தங்கள் சொத்துக்கள் பாதிக்கும் என்ற அச்சத்தில், தோட்ட நிறுவனங்கள், ஆசிரமங்கள், கல்வி நிறுவனம் நடத்துவோரே தற்போது பிரச்னையை துாண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த 42 யானை வழித்தடங்களுக்கான, 80 சதவீத இடங்கள், வனம் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களாகவே இருக்கின்றன; மீதமுள்ள 20 சதவீத இடங்கள் மட்டுமே, தனியாரிடமிருந்து எடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கை வரும் போது தான், இன்னும் முழுமையான விபரங்கள் தெரியவரும்.

இந்த விஷயத்தில், விவசாயிகள், ஆன்மிக அன்பர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழித்தடங்களின் அவசியத்தை புரிய வைப்பது அரசின் கடமை. அதற்கு முதலில், வரைவு அறிக்கையை தமிழில் தயாரித்து, மக்களின் பார்வைக்கு குறைந்தபட்சம், 60 நாட்கள் வைக்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரின் கருத்தையும் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வலுவாக உள்ளது.

அவங்க 20; இவங்க 4

ஏன் இந்த முரண்பாடு?


மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், கடந்த ஆண்டில் வெளியிட்ட இந்தியாவின் யானை வழித்தடங்கள் அறிக்கையில், நாடு முழுதும் 150 யானை வழித்தடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 25, தமிழகத்தில் 20 தடங்கள் இடம் பெற்றிருந்தன. இப்போது தமிழக வனத்துறை வெளியிட்ட வரைவில், தமிழகத்தில் 42 வழித்தடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் எப்படி 22 வழித்தடங்கள் அதிகரித்தன என்பதே, இப்போது கேள்வி.மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை, இந்திய வன உயிரின நிறுவனம் தயாரித்துக் கொடுத்தது. அதில், 'இது முழுமையான அறிக்கை இல்லை' என்று, 'பொறுப்பு துறப்பு' தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இன்னும் தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, தமிழக வனத்துறை இப்போது வெளியிடப்பட்டுள்ள யானை வழித்தட வரைவு அறிக்கையிலும், 42 யானை வழித்தடங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை அனைத்துமே வழித்தடங்களாக இல்லாமல், மூன்று வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன.யானைகளுக்கான வாழ்விடங்களை உறுதிப்படுத்தும் வகையில், நிலப்பரப்பு இணைப்பு மண்டலம், அதிமுக்கிய யானை வழித்தடம், முக்கிய யானைப்பாதை என, மூன்று வகைகளில் பிரித்து, வரைவு அறிக்கையை குழு தயாரித்துள்ளது. இதுவும் வரைவு அறிக்கை என்பதால், பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றே அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு, கடந்த ஆண்டில் வெளியிட்ட யானை வழித்தட அறிக்கையில் உள்ள 20 வழித்தடங்களும், தமிழக வனத்துறை இப்போது வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆனால், அவற்றை தவிர்த்து, யானை வாழ்விடங்களை இணைக்கும் நிலப்பரப்புகள், யானைகள் மாற்றாக பயன்படுத்தும் பாதைகள் ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் 22 வழித்தடங்கள் அதிகரிக்க இதுவே காரணம் என, தெரிவிக்கப்படுகிறது.



1

கடந்த 2006 - 2018 வரையிலான ஆண்டுகளில், இந்தியாவிலேயே அதிகளவு யானை-மனித மோதல் நடந்துள்ள பகுதிகளில் கோவைக்கான இடம்

12.4

இந்தியாவில் நடக்கும் மனித - வன உயிரின மோதலில் யானைகளால் கொல்லப்படும் மனிதர்களின் சதவீதம்



27.4

யானைகள் உயிரிழப்பில், மனிதர்களால் இறக்கும் யானைகளின் சதவீதம்

600

காட்டுப்பன்றி உள்ளிட்ட மற்ற வன உயிரினங்களை விட, யானைகளால் ஏற்படும் பயிர்ச்சேதங்களின் மடங்கு

1/5

யானைகளால் இந்திய விவசாயிகளின் ஆண்டு வருவாயில் ஏற்படும் பாதிப்பின் பங்கு



10,00,000

இந்தியாவில் மனித - வன உயிரின மோதலால் ஏற்படும் பயிர் பாதிப்பின் பரப்பு ஹெக்டேரில்

கொங்குவில் 61 சதவீதம்


தமிழகத்தில் உள்ள 26 வனக்கோட்டங்களில், 20 வனக்கோட்டங்களுக்கு உட்பட்ட 9,217 சதுர கி.மீ., பரப்பு வனங்களில், 2,961 யானைகள் இருப்பதாக, 2023 யானை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவற்றில், ஊட்டி, மசினகுடி மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும், 790 யானைகள் அதாவது 27 சதவீதம் வாழ்கின்றன.

ஆசனுார், சத்தியமங்கலம் வனக்கோட்டம் மற்றும் சத்தி புலிகள் காப்பகத்தில் 668 யானைகள் - 23 சதவீதமும், பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் 337 யானைகள், - 11.4 சதவீதம் வாழ்வதாக தெரியவந்துள்ளது. அதாவது, கோவை, நீலகிரி, திருப்பூர் என, கொங்கு மாவட்டங்களில் உள்ள வனங்களில் மட்டும், 61 சதவீதம் யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

'சைலன்ட் மோடில்' சாஹு


யானை வழித்தட திட்டத்தை வரவேற்கும் பலரும், இந்த வரைவு அறிக்கையில், பல பகுதிகள் விடுபட்டுள்ளதாக குறை கூறுகின்றனர். குறிப்பாக, குழுவில் இடம் பெற்றுள்ள இரண்டு ஆராய்ச்சியாளர்கள், மசினகுடியிலுள்ள நிலம், கூடலுாரில் செக்சன் 17 பகுதியிலுள்ள எஸ்டேட்டை காப்பாற்ற, அந்த வழித்தடத்தின் நீளத்தை 1,500 மீட்டரில் இருந்து 500 மீட்டராக குறைத்து விட்டதாக புகார் வாசிக்கின்றனர். அதே நேரத்தில், எதிர்ப்பவர்கள், தேவையற்ற இடங்களையும் வழித்தடமாக சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை அறிய, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூவை பலமுறை தொடர்பு கொண்டு, கேள்விகளை அனுப்பிய போதும், அவரிடமிருந்து பதில் பெற முடியவில்லை.



திட்ட வரைவு பரிந்துரைகள்

யானைகள் வழித்தடங்களில் உள்ள அனைத்து வகை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் யானைகள் செல்ல அதிக பாலங்கள் கட்ட வேண்டும். வழித்தடங்களில் உள்ள இரும்பு கம்பி வேலிகள், மின் வேலிகள் அகற்றப்பட வேண்டும் அதிக யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி, பள்ளத்தாக்குகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, பராமரிக்க வேண்டும் யானைகள் வழித்தடங்களில் சுதந்திரமாக நடமாட, இடையூறாக உள்ள அனைத்து நெருக்கடி பகுதியையும் சரி செய்ய வேண்டும். அதிக நெருக்கடி பகுதி நிலங்களை கையகப்படுத்தி, மனித வாழ்விடங்களை அகற்ற வேண்டும் தனியார் நிலங்கள், கட்டடங்கள், சாலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். குத்தகை காலம் முடிந்த தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். யானை - மனித மோதலை தவிர்க்க, புதிய கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் மசினகுடி - உதகை பாதையில் சுற்றுலா பயணியரை அனுமதிக்கக்கூடாது; உதகை செல்ல கூடலுார் பாதையை பயன்படுத்த வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு யானை வழித்தடத்திலும் உள்ள பிரச்னைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகளை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையுடன், மாநில அரசு கூடுதலாகவும், தனித்தனி பாதைக்கும் கருத்தை தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு அறிவிப்பு படி யானை வழித்தடங்கள் அனைத்தும் வாழ்விடமாக்கப்படுவதாக கூறுவதை பல்வேறு தரப்பினரும் எதிர்க்கின்றனர்.



அதிக பிரச்னைக்குரிய வழித்தடம்

ஓசூர் வனக்கோட்டத்தில் தளி மற்றும் கர்நாடகா மாநிலம், பிலிக்கல், பிலிக்கல் - தமிழக எல்லையான ஜவளகிரி இடையே உள்ள இந்த இரு வழித்தடத்தை தான், யானைகள் சென்று வரும் வழித்தடமாக அறிவித்துள்ளனர். இதில், தளி - பிலிக்கல் இடையே உள்ள வழித்தடத்தில், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் போன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளதால், யானைகள் பல நேரங்களில் வழித்தடம் மாறி செல்லும் நிலை உருவாகிறது.கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும், தமிழக வனப்பகுதிக்கு இடம் பெயரும், 150க்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு வழிகளில் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை வனச்சரகங்களுக்கு பயணிக்கின்றன. இவற்றை வழித்தடங்கள் என வனத்துறையினர் கணக்கிடவில்லை. காலம் காலமாக இடம் பெயர்வு யானைகள் சென்று வந்த அதே வழியில் தேசிய நெடுஞ்சாலை, தனியார் நிறுவனங்கள், குவாரிகள், விவசாய நிலங்கள் என பல குறுக்கிடுகின்றன. இதனால், யானைகள் வழித்தவறி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கின்றன.



மாற்றி யோசிக்கலாமே!

இலங்கையில் 'ஆரஞ்சு எலிபென்ட் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. யானைகள் சிட்ரஸ் அமிலம் உள்ள பழங்களை தவிர்க்கும். இதை பல்வேறு ஆய்வுகளுக்கு பின் உறுதி செய்துள்ளனர். அதனால் வனப்பகுதி எல்லையில் சிட்ரஸ் அமிலம் உள்ள ஆரஞ்சு மரங்களை வளர்க்கலாம். அதேபோல் மிளகு செடிகளையும் யானைகள் தொடுவதில்லை. யானைகள் விரும்பாத இது போன்ற பயிர்களை எல்லையில் விவசாயம் செய்தால் யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்கலாம்.



- நமது நிருபர் குழு -

பலதரப்பட்ட கருத்துக்கள்


யானை வழித்தட அறிக்கை வரைவில் மிக முக்கியமான பகுதிகளில் வேண்டுமென்றே சில பகுதிகளை தவிர்த்துள்ளனர். அறிக்கையில் ஒரு எண்ணிக்கை, கோர்ட்டில் ஒரு எண்ணிக்கையை தெரிவித்துள்ளனர். முதலில் 42 வழித்தடங்கள் எவை என்பதை விளக்கி, தமிழில் அறிக்கை வெளியிட வேண்டும்; யானையின் உண்மையான வழித்தடங்களை மறைக்க முயற்சி நடந்தால், அதற்கு கோர்ட்டில் வனத்துறை பதில் சொல்ல வேண்டும். - எஸ்.முரளிதரன், வழித்தட வரைவுக்கு காரணமான பொதுநல மனு தாக்கல் செய்தவர், சென்னை.

யானைகள் வழித்தட அறிக்கை வரைவை தமிழாக்கம் செய்யவில்லை. விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. வனத்துறை அதிகாரிகள் விருப்பத்துக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீருக்காக யானைகள் வெளியேறாமல் தடுப்பது வனத்துறை பொறுப்பு. இப்போது, 40 வழித்தடம் என்கின்றனர். பத்தாண்டுகளில் 80 வழித்தடம் என்பர். யார் கருத்தையும் கேட்காமல் இந்த சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர்; இதை கண்டிப்பாக ஏற்க முடியாது.

- வேணுகோபால், மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்

வனத்துறை, பொது அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து யானை வழித்தடங்களை பற்றி, ஆராய்ச்சி செய்து 40க்கும் மேற்பட்ட இடங்களை கண்டறிந்துள்ளனர். இந்த அறிக்கையை செயல்படுத்த வேண்டும். அதே சமயம் அந்த வழித்தடத்தின் உண்மை தன்மையையும் வனத்துறை உறுதி செய்ய வேண்டும். வழித்தட ஆக்கிரமிப்புகளை தடுத்தால், யானைகள் ஊருக்குள் வராது. யானை- மனித மோதல் நடக்காது; அதற்கு யானை வழித்தடத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

- கந்தசாமி, வன உயிரின ஆர்வலர், மேட்டுப்பாளையம்

கூடலுார் ஓவேலி பேரூராட்சி பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஒட்டு மொத்த மக்களையும், தமிழக வனத்துறை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளதை இது வெளிக்காட்டுகிறது. மக்களின் கருத்துக்களை கேட்காமல், யானை வழித்தட வரைவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து ஓட்டுக்களை, பெற்று கொண்ட பின்னர், இதுபோன்ற உத்தரவை நடைமுறைபடுத்த ஆளும் தி.மு.க., முயற்சிப்பது மக்களை ஏமாற்றி பழிவாங்கும் செயல். இதை திரும்ப பெற வேண்டும்.

- பொன் ஜெயசீலன், கூடலுார் எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,

ஓவேலியில், 1840லிருந்து விவசாயம் நடக்கிறது; அதேபோல, தேவாலா சுற்று வட்டார பகுதிகளில், மூன்று தலைமுறையாக மக்கள் வாழ்கின்றனர். யானைகளை பாதுகாப்பதும், அதன் வாழ்விடங்களை பாதுகாப்பது முக்கியம். அதே நேரம் வனப்பகுதியில் யானைகளுக்கான உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் தான், அவை மக்கள் வசிப்பிடங்களை நாடி வருகிறது. அதற்கு முதலில் தீர்வு காண வேண்டும்.

- சிவசுப்ரமணியம், பொதுச்செயலர், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நாங்கள் யானை வழித்தடத்தை தடுக்கவில்லை. ஏற்கனவே யானைகள் பயன்படுத்திய வழித்தடங்களில் ஏராளமான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதை அகற்ற வேண்டும். தடைகளால் தான் யானைகள் குடியிருப்புகளை நோக்கி வருகின்றன. அதை பற்றி அரசு எந்த கருத்தையும் கேட்காமல் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் பாதிக்காத வகையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

- சுனில், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர், கூடலுார்

வனம் சார்ந்து வசிப்போருக்கு யானைகளின் பாரம்பரிய வழித்தடம் தெரியும். தமிழக வனத்துறை வெளியிட்ட புதிய, கூடுதல் வழித்தடங்கள் தேவையற்றது. வனத்திலும், வனத்தை ஒட்டி வசிப்பவர்கள் வனவிலங்குகளுக்கு எதிரானவர்கள் போலவும், வனத்துறைதான் வனத்தையும், வன விலங்குகளையும் காப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துவது தவறு. இத்திட்ட வரைவு வாயிலாக வனத்தில் உள்ளவர்களை வெளியேற்றும் செயலை ஏற்க முடியாது.

- வி.பி.குணசேகரன், தலைவர் -- தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

மத்திய அரசின் யானை வழித்தட வழிகாட்டி நெறிமுறையில், பாரம்பரியமான யானை வழித்தடம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. வழித்தடத்தை காக்க மட்டுமே யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை யானைகளின் வாழ்விடமாக மாற்ற கூறவில்லை. யானை வழித்தடம் வரையறை தெரியாமல் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உணவு, குடிநீர், வழிதவறி வந்தது என ஏதே ஒரு காரணத்துக்காக, ஓரிரு முறை யானைகள் வந்து சென்ற பாதைகளைக்கூட வழித்தடம் என அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை, 20 வழித்தடத்தை மட்டும் செயல்படுத்த வலியுறுத்துகிறோம்.

- சுபிதளபதி, வக்கீல், கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us