சித்த மருத்துவ நூல்கள் ஆயுர்வேத நூல்களாக மாற்றம்; உரிமை பறிபோகும் என மருத்துவர்கள் கவலை
சித்த மருத்துவ நூல்கள் ஆயுர்வேத நூல்களாக மாற்றம்; உரிமை பறிபோகும் என மருத்துவர்கள் கவலை
சித்த மருத்துவ நூல்கள் ஆயுர்வேத நூல்களாக மாற்றம்; உரிமை பறிபோகும் என மருத்துவர்கள் கவலை

மதுரை : தமிழில் இருந்து தென்னிந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சித்த மருத்துவ நுால்கள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள புத்தக அட்டவணையில் ஆயுர்வேத நுால்களாக மடைமாற்றம் செய்வது தமிழ் மருத்துவத்தின் அறிவுசார் சொத்துரிமை பறிபோவதற்கு சமம் என சித்தா டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி இந்திய மருத்துவ முறைகள். இவற்றிலுள்ள தொன்மையான மூல நுால்கள் மட்டும் மருந்து மற்றும் அழகு சாதன சட்டத்தில் சேர்க்கப்படுவது வழக்கமான நடைமுறை. சித்த மருத்துவத்திற்கான மூல நுால்கள் தமிழிலும் ஆயுர்வேத மருத்துவ நுால்கள் சமஸ்கிருதத்திலும் யுனானி மருத்துவத்திற்கு அரேபிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றின் மருத்துவ முறைகளும் ஒரே மாதிரி இருந்தாலும் மருந்துகள், பயன்களில் வேறுபாடுகள் உள்ளன.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அட்டவணை 1ல் ஆயுர்வேத மருத்துவத்திற்கு 227 நுால்கள், சித்த மருத்துவத்திற்கு 88, யுனானிக்கு 112 என மூல நுால்களின் ஆசிரியர், வெளியீட்டாளர், வெளியிட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 37 ஆயுர்வேத நுால்களில் ஆசிரியர் பெயர் இல்லாமல் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலநுால், ஆண்டு மற்றும் பதிப்பகத்தார் பெயருடன் வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் தமிழ்நாடு சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்க மாநில தலைவர் ஜெயவெங்கடேஷ், செயலாளர் செந்தில்குமார்.
வரலாறு மாறும் அபாயம்
அவர்கள்கூறியதாவது: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தில்இருந்து நுாற்றுக்கும்மேற்பட்ட தமிழ் சித்த மருத்துவ நுால்களை மலையாளம், மராத்தி,கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஏற்கனவே மொழிபெயர்த்துள்ளனர். இவற்றை ஆயுர்வேத நுாலாக மாற்ற முயற்சி நடக்கிறது.சித்த வைத்தியரின் புலிப்பாணி வைத்திய நுால் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின் புலிப்பாணி ஆயுர்வேத நுாலாக மாறியுள்ளது.
இவற்றிற்கு மற்றொருவர் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தால் பின்னாளில் சித்த மருத்துவ நுால்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதாக வரலாறு மாறிவிடும். சமஸ்கிருத நுால்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்படும். இதன் மூலம் மருந்து செய்முறைகள் மாறுவதில்லை என்றாலும் தமிழர்களின் தனிப்பட்ட சித்த மருத்துவ அறிவு பறிபோகிறது. இது அறிவுசார் சொத்துரிமைக்கு உட்பட்ட விஷயம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் சேர்க்கப்பட்டுள்ள 12 மலையாளம், 26 தெலுங்கு, 5 மராத்தி, 5 ஹிந்தி நுால்களுக்கான மூல நுால்களை அடையாளம் கண்டு அவற்றின் சமஸ்கிருத பதிப்பு, ஆண்டு, பதிப்பகத்தார் பெயரை சேர்க்க வேண்டும். இவற்றின் மூலநுால்கள் கிடைத்தபின்பு பட்டியலை புதிய இணைப்பாக ஆயுஷ் அமைச்சகம் சேர்க்க வேண்டும் என்றனர்.