'நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதல்வர்': பழனிசாமி
'நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதல்வர்': பழனிசாமி
'நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதல்வர்': பழனிசாமி
ADDED : செப் 01, 2025 03:55 AM

சென்னை : 'அமெரிக்க வரி விதிப்பால், கோவை மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பொறுப்பை தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் வகித்து வருகிறார்.
அதன்படி, 'அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரியால் பாதிக்கப்பட்ட திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க, நடவடிக்கை எடுங்கள்' என பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
உண்மையில் அவர் ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை, ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்களுக்கு ஏற்படுத்திய பிரச்னைகள் ஏராளம்.
வணிக நிறுவன கட்டடங்களுக்கு, 150 சதவீதம் வரி உயர்வுடன், ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால், அந்த தொழில்கள் ஏற்கனவே நலிவடைந்துள்ளன.
நான்கு முறை வெளிநாடு சென்றும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளி தொழிலுக்கு, எவ்வித வெளிநாட்டு முதலீடுகளையும் முதல்வர் ஸ்டாலின் ஈர்க்கவில்லை. தி.மு.க., அரசு திறனற்ற வகையில் செயல்பட்டதன் காரணமாக, தொழில் துறை நலிவடைந்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில் தமிழகம் கெட்டு குட்டிச்சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழிபோடும் முதல்வர் ஸ்டாலின், தற்போது அமெரிக்காவின் வரி உயர்வால், கோவை, திருப்பூர் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
தி.மு.க., ஆட்சியின் அலங்கோல செயல்பாடுகளால், கோவை, திருப்பூரில் பின்னலாடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன என்பதே உண்மை.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
அதே நேரத்தில், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை, தங்கு தடையில்லாமல் இங்கு உற்பத்தியானால் தான், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வை போக்க, தி.மு.க., அரசு உடனடியாக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.