Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/பெயரளவிற்கு நடக்கும் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகளால் மாணவர்கள் அவதி

பெயரளவிற்கு நடக்கும் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகளால் மாணவர்கள் அவதி

பெயரளவிற்கு நடக்கும் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகளால் மாணவர்கள் அவதி

பெயரளவிற்கு நடக்கும் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகளால் மாணவர்கள் அவதி

ADDED : செப் 03, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
சென்னை : 'முதல்வர் கோப்பை'க்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் வரும் நிலையில், போட்டிகள் பெயரளவிற்கு நடத்தப்படுவதும், முறையான திட்டமிடல் இல்லாததும், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தனித்தனியே முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன.

மொத்தம், 67 வகையான விளையாட்டு போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, பரிசுத்தொகை வழங்க, 37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. அதில், பல்வேறு குளறுபடிகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டு எழு ந்துள்ளது.

இதுகுறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:


ஆண்டுதோறும் முறையான திட்டமிடல் இல்லாமல், முதல்வர் கோப்பை என்ற பெயரில், கண்துடைப்புக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, அனைத்து பள்ளிகளில் இருந்தும், மாணவ, மாணவியரை அனுப்பும்படி சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அத்துடன், இணையதளம் வழியாகவும் பதிவு செய்து, யார் வேண்டுமானாலும் போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஆன்லைனில்' பதிவு செய்தால், போட்டி நடக்கும் நாள், நேரம் குறித்த விபரங்களை, முன்கூட்டியே வெளியிடுவதில்லை. அதிலுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால், உரிய பதில் அளிப்பதில்லை. சமீபத்தில் டென்னிஸ் போட்டிக்கு பதிவு செய்திருந்தவர்களுக்கு, மதியம் போட்டி என, காலையில் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதைக்கண்ட பெற்றோர், பள்ளிக்கு சென்றிருந்த குழந்தைகளை அவசரமாக அழைத்துக் கொண்டு, போட்டி நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு நுாற்றுக்கணக்கான போட்டியாளர்கள் குவிந்திருக்க, போட்டியை எப்படி நடத்துவது என்று தெரியாமல், போட்டி ஏற்பட்டாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பின், பெயருக்கு ஆங்காங்கே போட்டிகளை நடத்தி சமாளித்துள்ளனர்.

வாலிபால் விளையாட்டு போட்டிக்கு, குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று, 'செட்' வரை, போட்டிகளை நடத்த வேண்டும். அதிக அணிகள் வந்ததால், ஒரு, 'செட்'டில் போட்டிகள் முடிக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறி, வீரர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், பெயரளவிற்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சென்னையை பொறுத்தவரை, ஏராளமான மைதானங்கள் இருந்தும், நேரு விளையாட்டு அரங்கில் மட்டுமே, இரு பாலருக்குமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கால்பந்து போட்டி பத்து நிமிடம் மட்டுமே நடத்தப்பட்டது. கிரிக்கெட் ஏழு ஓவர் நடத்தப்பட்டது. இப்படி நடத்துவதற்கு பதில், விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமலே இருந்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விதிகளை பின்பற்ற முடியவில்லை

உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: மாநிலம் முழுதும், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், கடந்த மாதம், 29ல், துவங்கி நடந்து வருகின்றன. போட்டிகளை நடத்த, போதுமான ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கவில்லை. நுாற்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் போது, விதிகளை பின்பற்ற முடியவில்லை. மேலும், ஒவ்வொரு விளையாட்டு போட்டியையும், இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும் என்பதால், அவசரமாக முடிக்கப்படுகிறது. போட்டிகளுக்கு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியரை அழைத்து வரும்படி கூறுகின்றனர். அதற்கு நிதி எதுவும் அளிப்பதில்லை. ஆசிரியர் இல்லாமல், மாணவ, மாணவியர் செல்லும் போது, அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. போட்டிகளை அவசர கதியில் நடத்தாமல், முறையாக திட்டமிட்டு, திறமையானவர்கள் பங்கேற்க வழி செய்தால் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us