தி.மு.க., முப்பெரும் விழாவால் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!
தி.மு.க., முப்பெரும் விழாவால் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!
தி.மு.க., முப்பெரும் விழாவால் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!
ADDED : ஜூன் 18, 2024 05:56 AM

கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த 15ல் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில், அமைச்சர் எ.வ.வேலு கூட்டத்தை வழி நடத்தியதில் மோதல் ஏற்பட்டுள்ளது; அதேபோல, மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுக்கு, மேடையில் இடம் மறுக்கப்பட்டதும் சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: முப்பெரும் விழாவுக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான முத்துசாமி வரவேற்று பேசுவதாகவும், மாநகர் மாவட்டச் செயலர் கார்த்திக் நன்றி கூறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விழாவில் அவை இரண்டுமே நடக்கவில்லை. மேடை முழுவதையும் அமைச்சர் வேலுவே ஆக்கிரமித்துக் கொண்டார்.
கூட்டணி கட்சித் தலைவர்களை பேச அழைப்பதில் துவங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசும் வரையிலும், அவரே ஆதிக்கம் செலுத்தினார். அதேபோல, அமைச்சர் உதயநிதி இடையில் வந்து, இளைஞரணி சார்பில் அனைத்து எம்.பி.,க்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கினார். அதையும் வேலுவே அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.,க்கும் பரிசு தரும்போது, அவரே முன்னிலை வகித்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு, கூட்டணி கட்சிகள் சார்பில் நினைவுப்பரிசு மற்றும் வெள்ளி செங்கோல் வழங்கியபோதும், கோவையின் பொறுப்பு அமைச்சரான முத்துசாமி ஒதுங்கியே நின்றார். மூத்த அமைச்சராகவும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்தும், விழா மேடையில் தன்னை அமைச்சர் வேலு முழுமையாக ஓரங்கட்டி விட்டார் என கடுமையான கொந்தளிப்பில் இருக்கிறார் முத்துசாமி.
அதேபோல, 200 அடி அகலத்துக்கும் அதிகமாக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்த போதும், மேடையில் மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் யாருக்கும் இடம் தரப்படவில்லை; மேடையிலிருந்து தொலைவில், முன் வரிசையில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
இப்படி முப்பெரு விழா குமுறல் குறித்து கட்சிக்குள் சலசலப்புகள் இருக்க, 'மூத்த அமைச்சர் என்ற முறையில் பொதுப் பணித் துறை அமைச்சரான வேலுவுக்குத்தான், முப்பெரும் விழா மேடை அமைப்பது முதல் கொண்டு, விழாவை சிறப்பாக நடத்துவது வரை கட்சித் தலைமை பொறுப்பு கொடுத்திருந்தது. அந்த அடிப்படையிலேயே மேடையில் வேலு கடைசி வரை இருக்க வேண்டியதானது. அது தவிர, வேலுவுக்கென எந்த சிறப்பு சலுகையும் கொடுக்கப்படவில்லை,' என அறிவாலய வட்டாரங்கள் கூறின.
- நமது சிறப்பு நிருபர் -