முரண்டு பிடித்த செங்கோட்டையன் மீண்டும் கட்சியினருடன் சகஜம்
முரண்டு பிடித்த செங்கோட்டையன் மீண்டும் கட்சியினருடன் சகஜம்
முரண்டு பிடித்த செங்கோட்டையன் மீண்டும் கட்சியினருடன் சகஜம்
ADDED : மார் 26, 2025 06:31 AM

சென்னை: அ.தி.மு.க.,வில் திடீரென முரண்டு பிடித்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மீண்டும் கட்சியினருடன் சகஜமாக பழகத் துவங்கி உள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை, மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை, அக்கட்சி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் முன்வைத்தார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். இதனால், அதிருப்தி அடைந்த செங்கோட்டையன், சட்டசபைக்கு தனியாக வந்து சென்றார்.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுடன் முன்னர் போல சகஜமாக பேசாமல் இருந்தார். பழனிசாமி பெயரை உச்சரிப்பதை தவிர்த்தார். சபாநாயகருக்கு எதிராக அ.தி.மு.க., தீர்மானம் கொண்டு வந்தபோது, அவரை தனியாக சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில், கொறடா வேலுமணி உத்தரவுப்படி, சபை நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
செங்கோட்டையனை சமரசம் செய்யும் பணியை, அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.,விடம் பழனிசாமி ஒப்படைத்திருந்தார். அவர் தொடர்ந்து பேசி, செங்கோட்டையனை வழிக்கு கொண்டு வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களுடன், செங்கோட்டையன் மீண்டும் சகஜமாக பேசத் துவங்கி உள்ளார்.
நேற்று மும்மொழி கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார், உலக தமிழ் மாநாடு தொடர்பான விவரங்களை தெரிவிக்க சிரமப்பட்டார். அவருக்கு உடனடியாக சில தகவல்களை செங்கோட்டையன் வழங்கினார். செங்கோட்டையன் வழிக்கு வந்தது, பழனிசாமிக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.