கோவையில் 18ல் இன எழுச்சி மாநாடு: வேட்பாளர்களை அறிவிக்க சீமான் திட்டம்
கோவையில் 18ல் இன எழுச்சி மாநாடு: வேட்பாளர்களை அறிவிக்க சீமான் திட்டம்
கோவையில் 18ல் இன எழுச்சி மாநாடு: வேட்பாளர்களை அறிவிக்க சீமான் திட்டம்

கோவையில் வரும் 18ம் தேதி நடக்கும் இன எழுச்சி மாநாட்டில், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டுள்ளார்.
'காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி; பா.ஜ., மனித குலத்தின் எதிரி. தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த கட்சிகளை நாறுநாறாக கிழிப்பேன். அதற்காக தான், வரும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம்' என, சீமான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளராக சீமானை அறிவிப்பதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பில், வரும் 18ல், கோவையில் இன எழுச்சி மாநாடு நடக்கிறது.
இம்மாநாடு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற விரும்பும் சீமான், சிறப்பு விருந்தினராக திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில், தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும், தன் கட்சி பிரதிநிதி பங்கேற்பார் என்றும், மம்தா உறுதி கூறியிருக்கிறார்.
தேர்தல் பணிகளை துவக்கும் விதமாக, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, இம்மாநாட்டில் வெளியிட, சீமான் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவரது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்; பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்; கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாநாடு நடத்தப்படுகிறது.
வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில், வழக்கம்போல் பெண்களுக்கு சரிசம வாய்ப்பு வழங்கப்படும். எந்த கட்சியும் செய்யாத வகையில், பொது தொகுதிகளில் பட்டியலின வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். இதுவரை எந்த கட்சியிலும் பிரதிநிதித்துவம் பெறாத, சிறிய சமுதாயத்தினருக்கு முன்னுரிமை தரப்படும்.
பிற கட்சிகள் கையில் எடுக்காத பிரச்னைகளுக்கு முன்னுரிமை வழங்கி, தேர்தல் பிரசாரத்தை துவக்க, சீமான் திட்டமிட்டுள்ளார்.
பணத்திற்கு ஓட்டா; இனத்திற்கு ஓட்டா; வளர்ச்சிக்கு ஓட்டா; இலவசத்திற்கு ஓட்டா என்ற கேள்வியை முன்வைத்து, பிரசாரத்தை துவங்குகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.