மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடனம்: 224வது ஆண்டு தினத்தை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்.,
மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடனம்: 224வது ஆண்டு தினத்தை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்.,
மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடனம்: 224வது ஆண்டு தினத்தை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்.,
ADDED : ஜூன் 15, 2025 02:48 AM

சென்னை: ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மருது பாண்டியர்கள் வெளியிட்ட, ஜம்புத்தீவு பிரகடனத்தின், 224வது ஆண்டு தினம், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நாளை திருச்சியில் கொண்டாடப்படுகிறது.
18ம் நுாற்றாண்டில் கர்நாடக நவாப் முகமது அலி, அவரது சகோதரியை மணந்த சந்தா சாகிப் இடையே நடந்த போரில், முகமது அலிக்கு ஆங்கிலேயரும், சந்தா சாகிபுக்கு பிரெஞ்சியரும் ஆதரவளித்தனர்.
போரில் வெற்றி பெற்ற முகமது அலி, பிரதிபலனாக, பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்கு கொடுத்தார். ஆங்கிலேயர் வரி வசூலில் இறங்கியதும், வெகுண்டெழுந்த மருது பாண்டியர்கள், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து திரட்டி, ஆங்கிலேயரை விரட்ட திட்டமிட்டனர்.
ஒன்றுபட வேண்டும்
அதற்காக, 1801 ஜூன் 16ல், மருது சகோதரர்கள், ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்டனர். திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டை, கோவில்களில் இந்த பிரகடனம் ஒட்டப்பட்டது. அதில், கூறப்பட்டு இருந்ததாவது:
நவாபு முகமது அலி, ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடம் கொடுத்து விட்டார். கொடுத்த வாக்குறுதிகளை மீறி, அவரது அரசையே தங்களுடையதாக ஆக்கி, நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாக கருதி, ஐரோப்பியர்கள் ஆட்சி அதிகாரம் செய்து வருகின்றனர்.
மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கின்றனர். சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகி விட்டது.
ஒரு மனிதன், 1,000 ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும்கூட, கடைசியில் செத்துத்தான் ஆக வேண்டும். ஆனால், ஒருவன் அடையும் புகழ்தான் சூரிய, சந்திரர் உள்ளவரை அவனை வாழவைக்கும். எனவே, பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும்.
மீசை வைத்திருக்கும் எல்லோரும்; ராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்போர், அன்னியர்களின் கீழ் தொண்டு புரியும் சுபேதார்கள், ஹவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள், போர்க்கருவிகளை பயன்படுத்தும் எல்லாரும் வீரமிருந்தால், அதை கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களை எந்த இடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில், அவர்களை அழித்து விட வேண்டும். அவர்களுக்கு எவன் ஒருவன் தொண்டு, ஊழியம் செய்கிறானோ, அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது.
ஒட்டப்பட்ட இந்த அறிவிப்பை, சுவரிலிருந்து எவனொருவன் எடுக்கிறானோ, அவன் பஞ்சமா பாதகங்களை செய்தவனாக கருதப்படுவான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான முதல் விடுதலை குரலாக பார்க்கப்படும், இந்த பிரகடனத்தின் வாயிலாக, சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அதன் கூட்டணி பாளையங்களின் விடுதலையை மட்டும் சின்ன மருது பார்க்கவில்லை. நாடு முழுதும் விரைவில் விடுதலை பெறாவிட்டால், நமது பண்பாடு, கலாசாரத்திற்கு பல வகைகளிலும் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்திருந்தார்.
தமிழ் மரபில், 'நாவலந்தீவு' என அழைக்கப்படும் அகண்ட பாரத நாட்டை, நம் பண்டைய நுால்கள், 'ஜம்புத்தீவு' என்றே குறிப்பிடுகின்றன. எனவே, அகண்ட பாரதம் என்ற பொருள்படும்படி, அந்தப் பெயரையே, பிரகடனத்திற்கு மருது சகோதரர்கள் சூட்டினர்.
இங்குள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும், இங்கே ஆட்சி செய்த சில அரசர்களுக்கு இடையேயும் ஒற்றுமை இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டே, ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர் என்பதை, சின்ன மருது அறிந்து கொண்டார்.
அவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதையும், அதன் மூலமாகவே தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதையும், இந்தப் பிரகடனத்தின் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
மருது சகோதரர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், ஆங்கிலேயரின் வருகைக்கு முன் யார் யார், எந்தெந்தப் பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டு இருந்தனரோ, அவர்களுக்கே அந்தப்பகுதிகளை திருப்பித் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கூட்டு முயற்சி
ஒரு கூட்டு முயற்சி மூலமே எந்த ஒரு வெற்றியும் சாத்தியமாகும் என்பதை, சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சின்ன மருது. அதனால்தான் காலம் கடந்தும் நிற்கிறது, ஜம்புத்தீவு பிரகடனம்.
ஜம்புத்தீவு பிரகடனத்தின், 224வது ஆண்டு தினத்தையொட்டி, அந்த பிரகடனம் ஒட்டப்பட்ட திருச்சி மலைக்கோட்டை நுழைவுவாயில் அருகே, ஆர்.எஸ்.எஸ்., சார்பில், நாளை காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, ஆர்.எஸ்.எஸ்., மாநில செயற்குழு உறுப்பினர் இளங்குமார் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.