மேற்கு புறவழிச்சாலைக்கு இணையாக ரோடு! மாஸ்டர் பிளான் உத்தேச சாலைக்கு எதிர்ப்பு
மேற்கு புறவழிச்சாலைக்கு இணையாக ரோடு! மாஸ்டர் பிளான் உத்தேச சாலைக்கு எதிர்ப்பு
மேற்கு புறவழிச்சாலைக்கு இணையாக ரோடு! மாஸ்டர் பிளான் உத்தேச சாலைக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 09, 2024 12:41 AM

மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு இணையாக மாஸ்டர் பிளானில் மற்றொரு உத்தேச புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு, கடும் ஆட்சேபம் கிளம்பியுள்ளது.
கோவை நகரில் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்லும் நிலையில், ஒரே ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கு மட்டுமே 'எல் அண்ட் டி' பை பாஸ் அமைந்துள்ளது. மொத்தம் 27 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ள இந்த ரோட்டைத் தவிர்த்து, வேறு பை பாஸ் இல்லாததால், பல்வேறு ரோடுகளில் வரும் வாகனங்களும் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கட்டட அகற்றத்துக்கு எதிர்ப்பு
இதற்கு தீர்வு காணும் ஒரு முயற்சியாகவே, 2010ல் கோவைக்கு மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது மொத்தம் 27.2 கி.மீ., துாரத்துக்கு, மதுக்கரையில் துவங்கி, துடியலுாரில் முடியும் வகையில் ரோடு வடிவமைக்கப்பட்டு, அதற்கான நில ஆர்ஜித பிரேரணை வெளியிடப்பட்டது. அதில் துடியலுாரில் நிறைய கட்டடங்களை அகற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது.
அதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மீண்டும் மறு அளவீடு செய்யப்பட்டு, 2016 மார்ச் 4ல், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரசாணை (எண்:52) வெளியிடப்பட்டது.
அதில், 'ஏ 8' என்ற பெயரில், மதுக்கரை மைல்கல் அருகில் துவங்கி, நரசிம்ம நாயக்கன்பாளையம் தெற்குபாளையம் வரை, 32.43 கி.மீ., துாரத்துக்கு, 45 அடி அகல மேற்கு புறவழிச்சாலை அமைக்க ஒப்புதல் தரப்பட்டது.
அதன்படி, நிலம் எடுக்கப்பட்டு, ரோடு அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கோவைக்கான மாஸ்டர் பிளான் வரைவு, கடந்த பிப்.,11 ல் வெளியிடப்பட்டது. அதில், இதே மேற்கு புறவழிச்சாலைக்கு இணையாக, 'ஏ 7' என்ற பெயரில், துடியலுார், கணுவாய் வழியாக குனியமுத்துார் வரை, நான்கு வழிச்சாலையாக 150 அடி அகலத்துக்கு 32.80 கி.மீ., ரோடு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கொந்தளிப்பு
இதற்கான பிரேரணையில் இடம் பெற்றுள்ள சர்வே எண்களைப் பார்க்கும்போது, நன்கு வளர்ச்சியடைந்த துடியலுார் குடியிருப்புப் பகுதிகளில், நகர ஊரமைப்புத்துறையிடம் முறைப்படி அங்கீகாரம் பெற்ற, 12க்கும் மேற்பட்ட லே அவுட்களுக்கு நடுவில், இந்த பை பாஸ் திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது, இப்பகுதி மக்களை கடுமையான கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
2011ல், மேற்கு புறவழிச்சாலையும் குடியிருப்புக்கு நடுவில் ஊடுருவிச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டதால்தான், அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை மாற்றியமைத்து, ரோடு அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், ஒரே கோடு போல மற்றொரு ரோட்டை, அதே வழித்தடத்துக்கு இணையாக அமைக்க வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாஸ்டர் பிளானில் குறிக்கப்பட்டுள்ள பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் அமைந்திருப்பதுடன், புதிய குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் என பல விதமான திட்டங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
பல வழிகளிலும் வளர்ச்சியடைந்துள்ள இப்பகுதியில், இந்த பை பாஸ் அமைப்பதைக் கைவிட வேண்டுமென்று, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துடியலுார் பகுதியிலுள்ள 12க்கும் மேற்பட்ட பல்வேறு லே அவுட்களைச் சேர்ந்தவர்களும், 'ஏ 7' உத்தேச புறவழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முறைப்படி ஆட்சேபங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, நகர ஊரமைப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆட்சேபங்களின் அடிப்படையில்தான், இறுதி மாஸ்டர் பிளான் வெளியிடப்படும். மக்கள் கருத்துப்படி, திட்டங்கள் மாற்றப்படும்' என்றனர்.
புதிய புறவழிச்சாலை இருக்கட்டும்; பழைய மாஸ்டர் பிளானில் உள்ள திட்டச்சாலைகளை இத்துறையினர் முதலில் அமைக்கட்டும்!
-நமது நிருபர்-