Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ அன்புமணிக்கு அளித்த அங்கீகாரத்தை எதிர்த்து தேர்தல் கமிஷனில் ராமதாஸ் தரப்பினர் மனு

அன்புமணிக்கு அளித்த அங்கீகாரத்தை எதிர்த்து தேர்தல் கமிஷனில் ராமதாஸ் தரப்பினர் மனு

அன்புமணிக்கு அளித்த அங்கீகாரத்தை எதிர்த்து தேர்தல் கமிஷனில் ராமதாஸ் தரப்பினர் மனு

அன்புமணிக்கு அளித்த அங்கீகாரத்தை எதிர்த்து தேர்தல் கமிஷனில் ராமதாஸ் தரப்பினர் மனு

ADDED : செப் 18, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்து அளித்த கடிதத்தை திரும்ப பெற வேண்டும்' என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரிடம், ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பா.ம.க., தரப்பு நிர்வாகிகள் முரளிசங்கர், எம்.எல்.ஏ., அருள், சுவாமிநாதன், வழக்கறிஞர் கே.அருள் ஆகியோர் நேற்று காலை 9.45 மணிக்கு, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சந்தித்துப் பேசினர்.

அப்போது, கட்சி நிறுவனர் ராமதாஸ் சார்பில் அளித்த கடிதம்:

பா.ம.க., தலைவராக இருந்த அன்புமணியின் மூன்றாண்டு பதவிக்காலம், கடந்த மே 28ம் தேதி முடிந்தது. கட்சி விதிகளின்படி, மே 30ம் தேதியிலிருந்து, பா.ம.க., தலைவராக செயல்பட்டு வருகிறேன். இதை ஜூலை 5ல் நடந்த நிர்வாகக்குழு, 8ல் நடந்த செயற்குழு, ஆகஸ்ட் 17ல் நடந்த சிறப்பு பொதுக்குழு அங்கீகரித்தது.

கட்சியில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் குறித்து, தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த 11ம் தேதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, அன்புமணி நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்து, கடந்த 9ம் தேதி தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. அன்புமணி தெரிவித்த தவறான தகவல்கள் அடிப்படையில், கமிஷன் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக, அன்புமணி மற்றும் அவரது தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்து அளித்த கடிதத்தை திரும்ப பெற வேண்டும். ராமதாஸ் தலைமயில் நடந்த பொதுக்குழு தீர்மானத்தின்படி, அவரது தலைமையை அங்கீகரிக்க வேண்டும். பா.ம.க., தொடர்பான கடிதங்களை, திண்டிவனம், தைலாபுரம் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராமதாசும், அன்புமணியும் இரு வேறு நபர்களா? டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சந்தித்த ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள், அன்புமணியை, ராமதாஸ் நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைக் கேட்ட ஞானேஷ் குமார், 'அன்புமணியும், ராமதாசும் வேறு வேறு நபர்களா?' என, கேட்டுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'ராமதாஸ், அன்புமணி என்பதில் தேர்தல் கமிஷனுக்கு பெயர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் என, தன் பெயரை அன்புமணி குறிப்பிடுவதால் வந்த குழப்பம் இது. பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறி, அன்புமணி தரப்பினர், தேர்தல் கமிஷனில் அவசரமாக அங்கீகார கடிதம் பெற்றுள்ளனர். தேர்தல் கமிஷனில் நேரில் சென்று விசாரித்ததால், இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது' என்றனர். ***







      Our Apps Available On




      Dinamalar

      Follow us