உதயநிதி திறக்கும் அம்பேத்கர் சிலை; கோஷ்டி மோதலால் போலீஸ் பாதுகாப்பு
உதயநிதி திறக்கும் அம்பேத்கர் சிலை; கோஷ்டி மோதலால் போலீஸ் பாதுகாப்பு
உதயநிதி திறக்கும் அம்பேத்கர் சிலை; கோஷ்டி மோதலால் போலீஸ் பாதுகாப்பு
ADDED : மே 23, 2025 04:03 AM

புதுக்கோட்டை : கந்தர்வகோட்டையில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை, துணை முதல்வர் உதயநிதி நாளை திறக்கவிருக்கிறார். திறப்புக்கு முன் ஏற்பட்ட கோஷ்டி மோதலால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில், அம்பேத்கர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. தி.மு.க., - வி.சி., மற்றும் பல்வேறு அம்பேத்கர் சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து, இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.
தற்போது இந்த கூட்டமைப்பில் உள்ளவர்கள், இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று மாலை வருகிறார். அவர், கந்தர்வகோட்டையில் உள்ள அம்பேத்கர் சிலையை திறப்பதற்கு, தி.மு.க., தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அம்பேத்கர் சிந்தனையுடன் செயல்படும் திருமாவளவன் போன்ற தலைவர்களை அழைத்து வந்து, அவர்கள் கையால் தான் சிலை திறப்பை நடத்த வேண்டும் எனக்கூறி மல்லுகட்டுகின்றனர்.
இதனால், அம்பேத்கர் சிலையை துணை முதல்வர் உதயநிதி திறக்கும் சூழலில் ஏதும் அசம்பாவிதம் நடக்கலாம் என போலீஸ் தரப்பு அஞ்சுகிறது. இதை தவிர்க்கவே, அம்பேத்கர் சிலையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, கந்தர்வகோட்டைக்குச் சென்று, அம்பேத்கர் சிலையை மையமாக வைத்து சர்ச்சை ஏற்படுத்துவோர் அனைவரிடமும் சமாதான பேச்சு நடத்தினார். ஆனாலும், பலரும் சமாதானமடையவில்லை.
இதையடுத்து, போலீஸ் பாதுகாப்பை கூடுதலாக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.