தி.மு.க., கூடாரம் காலியாகும் ஊட்டியில் பழனிசாமி ஆவேசம்
தி.மு.க., கூடாரம் காலியாகும் ஊட்டியில் பழனிசாமி ஆவேசம்
தி.மு.க., கூடாரம் காலியாகும் ஊட்டியில் பழனிசாமி ஆவேசம்
ADDED : செப் 24, 2025 04:38 AM

ஊட்டி: “காங்., 117 சீட் கேட்பதால், தி.மு.க., - காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது தெளிவாகி விட்டது,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
ஊட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
ஊட்டி ஒருபக்கம் சுற்றுலா, மறுபக்கம் தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடையும் போது, கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் கொடுத்தோம். தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் எங்கள் அரசு அமைந்தவுடன் தேவையான மானியம் உயர்த்தி கொடுக்கப்படும்.
படுகர் இன மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தி.மு.க., அரசு அதற்குரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் குப்பைக்கும் வரி போட்டது தி.மு.க., அரசு.
கடந்த ஒரு வாரமாக குவாரி உரிமையாளர்களை அழைத்து மிரட்டுகின்றனர். 'எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் குவாரியை முடக்குவோம்; அபராதம் விதிப்போம்,' என்கின்றனர். பணத்துக்காகவே இந்த மிரட்டல். கடந்த ஆறு மாதத்தில் மட்டும், இப்படி மிரட்டல் வாயிலாக 2,000 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, 6,000 மதுக்கடைகளில், ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி மதுபாட்டில்கள் விற்பனையாகிறது. ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்து, ஒரு நாளைக்கு, 15 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. நான்கு ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் முறைகேட்டில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இந்த துறையின் அமைச்சரே, 10 ரூபாய் வாங்குவதை ஒப்புக்கொண்டார். எங்கள் ஆட்சி வந்தவுடன், டாஸ்மாக் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனை பெற்று தருவோம்.
அ.தி.மு.க., கட்சி அலுவலகம் டில்லியில் உள்ள உள்துறை அமைச்சர் வீட்டில் இருப்பதாக, கனிமொழி கூறியுள்ளார். 'கனவு கண்டாரா' என தெரியவில்லை. நீங்கள் அ.தி.மு.க.,வை, உடைக்க சதி செய்த போதும் அத்தனையும் முறியடிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் காங்., கட்சியினர், 117 இடங்களை தி.மு.க., தலைமையிடம் கேட்கின்றனர்; ஆட்சியில் பங்கு வேண்டும் என்கின்றனர். இதனால், தி.மு.க.,- - காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெளிவாக விட்டது. தி.மு.க., கூடாரம் காலியாக போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கோபி வந்த பழனிசாமி
செங்கோட்டையன் 'எஸ்கேப்'
கோபி, செப். 24-
நீலகிரி மாவட்டத்தில், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' நிகழ்ச்சியில் பங்கேற்க, சேலத்தில் இருந்து கார் மூலம் கோபி, சத்தியமங்கலம் வழியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று சென்றார்.
ஈரோடு மாவட்டம், கோபி பஸ் ஸ்டாண்டை அடைந்த பழனிசாமிக்கு, அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், ஏராளமான தொண்டர்களுடன் வரவேற்றார். இதனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கட்சி பொறுப்புகளிகல் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதால், அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி வழியாக சென்ற பழனிசாமிக்கு கூட்டம் கூட்டி வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற நிலையில், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க.,வினர் ஆட்களை கூட்டி வந்தனர்.
இதற்கிடையில், தன் தொகுதிக்குள் வரும் பழனிசாமியை வரவேற்க வேண்டியிருக்கும் என்பதால், அதை தவிர்க்க, முன்கூட்டியே ஊரில் இருந்து புறப்பட்டு, சென்னை வந்து தங்கிவிட்டார், செங்கோட்டையன்.