பெயரளவு கண்காணிப்பு தான் உயிர் பலிகளுக்கு காரணம்
பெயரளவு கண்காணிப்பு தான் உயிர் பலிகளுக்கு காரணம்
பெயரளவு கண்காணிப்பு தான் உயிர் பலிகளுக்கு காரணம்
ADDED : ஜூன் 20, 2024 05:20 AM

சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்கிறது. போதிய போலீசார் இல்லாததால், 'பெயரளவில்' மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு பணி தான், சாராய சாவுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்துார், வாழப்பாடி, தலைவாசல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக செல்லும் கல்வராயன்மலை, 1,095 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்படுகிறது. அங்கிருந்து சேலம், விழுப்புரம், பெரம்பலுார், கடலுார், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில், ஆத்துார், மேட்டூர், இரும்பாலை ஆகிய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப் - டிவிசன் டி.எஸ்.பி., அலுவலகத்தை, கடந்த 2010 நவ., மாதம், ஆத்துாருக்கு மாற்றியமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
கல்வராயன்மலையில், கருமந்துறை, கரியக்கோவில் மற்றும் கரியாலுார் என, மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், 180க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. போதியளவில் போலீசார் இல்லாததால், கண்காணிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனாலேயே கல்வராயன்மலையில் கள்ளச்சராயம் காய்ச்சுவது அதிகரித்து வருகிறது. மலையில் இருந்து இறங்கும் அனைத்து வழித்தடங்களிலும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து, 'பெயரளவில்' கண்காணிப்பு செய்வதால், போலீசாருக்கு தண்ணீர் காட்டிவிட்டு சாராயம் கடத்துவது தொடர்கிறது.
ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி பகுதியில், சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் கள்ளச்சாராய வியாபாரிகள் 'வாட்ஸாப் குரூப்' மூலம் தகவல் பரிமாற்றம் செய்து, பைக், மொபட் மூலம், 'டோர் டெலிவரி' செய்வதால் விற்பனையை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து, 13 பேர் பலியான அதே நாளில், தலைவாசல், மணிவிழுந்தான் பகுதியில் சாராயம் விற்பனை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
* ஆத்துார் மதுவிலக்கு போலீசார், ஜன., முதல், மே வரை, சாராயம், மதுபாட்டில் விற்பனை தொடர்பாக, 712 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில், 33 சாராயம் விற்பனை செய்த வழக்குகளில், 25 பேரை கைது செய்து, 2,848 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். கல்வராயன்மலை, கருமந்துறை, சிறுவாச்சூர் உள்பட 14 இடங்களில், 4,400 லிட்டர் சாராய ஊறலை அழித்துள்ளனர்.
ஆத்துார், இரும்பாலையில் பெண் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். மேட்டூரில், இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இரவு நேரங்களில், பெண் போலீசார், கல்வராயன்மலை பகுதிக்கு ஆய்வுக்கு செல்வதில் பாதுகாப்பு தொடர்பாக சிரமமான நிலை உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
எச்சரித்த 'தினமலர்':
![]() |
- நமது சிறப்பு நிருபர் -