முகுந்தன் இனி வரமாட்டார்: சமாதான மூடில் ராமதாஸ்: அன்புமணிக்கு 'ரூட்' க்ளியர்
முகுந்தன் இனி வரமாட்டார்: சமாதான மூடில் ராமதாஸ்: அன்புமணிக்கு 'ரூட்' க்ளியர்
முகுந்தன் இனி வரமாட்டார்: சமாதான மூடில் ராமதாஸ்: அன்புமணிக்கு 'ரூட்' க்ளியர்
ADDED : ஜூன் 08, 2025 02:50 AM

சென்னை: பா.ம.க.,வில், அப்பா ---- மகன் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், கடந்த 5ம் தேதி, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து, 45 நிமிடங்கள் பேசினார் அன்புமணி.
அதைத் தொடர்ந்து, பல் வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக, நேற்று சென்னை வந்த ராமதாஸ் அளித்த பேட்டி:
பல்வலிக்கு சிகிச்சை பெறவே சென்னை வந்து உள்ளேன்; வேறு எந்த திட்டத்தோடும் சென்னைக்கு வரவில்லை. அன்புமணியை சந்திக்கப்போவதில்லை. பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் விரைவில் சரி செய்யப்படும்.
ராஜினாமா
இதனால், கட்சிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து, இப்போது எதுவும் சொல்ல முடியாது.
ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் நீண்டகால நண்பர்கள். நட்பின் அடிப்படையில் இருவரும் தைலாபுரம் வந்து என்னுடன் பேசினர்.
கூட்டணிக்காக பா.ஜ.,விடம் இருந்து, எனக்கு எந்த அழைப்பும் கிடையாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மதுரை வருவது எனக்குத் தெரியாது.
கூட்டணி பற்றி இப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை. தகுந்த நேரத்தில் கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும். அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது.
பா.ம.க., இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நான்தான் நியமித்தேன். ஆனால், அவர் தற்போது ராஜினாமா செய்து விட்டார்.
அவர் விஷயத்தில் இனி முடிவெடுக்க எதுவும் இல்லை. அது முடிந்து போன விவகாரம். இனி, என்ன நடக்க வேண்டுமோ, அது குறித்துத்தான் பேச வேண்டும்.
முகுந்தனைப் பொறுத்த வரை, அவருக்கு கட்சி பொறுப்புகளில் விருப்பம் இல்லை. தொழில் செய்வதில்தான் ஆர்வமாக உள்ளார்.
அவர் விருப்பம் எதுவோ, அதை செய்யட்டும் என விட்டு விட்டேன். யாரையும் எதிலும் நிர்பந்தப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
தன் மகள்வழி பேரன் முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்த பின்னர்தான், ராமதாசை வெளிப்படையாக, அன்புமணி எதிர்க்க துவங்கினார். அதனால், இருவருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
விருப்பம் இல்லை
குடும்பத்தில் மேலும் ஒருவர் கட்சிப் பொறுப்புக்கு வருவது, அதுவும் தான் வகித்த இளைஞரணித் தலைவர் பதவிக்கு வருவது, கோஷ்டி பூசலுக்கு வழிவகுக்கும் என்பது, அன்புமணியின் வாதமாக இருந்தது.
இதை ஏற்றுக்கொண்டது போலவே முகுந்தன் பற்றிய கேள்விக்கு, ராமதாசின் நேற்றைய பதில் இருந்தது. “முகுந்தனுக்கு கட்சி பொறுப்புகளில் விருப்பம் இல்லை. தொழிலில் தான் ஆர்வம்,” என ராமதாஸ் அளித்த பதில், மகனுடன் அவர் சமாதானத்திற்கு தயாராகி விட்டதை காட்டுவதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், நேற்றைய பேட்டியில், ''நல்லது நடக்கும். உலகில் தீர்வு இல்லாத பிரச்னை என்று எதுவும் இல்லை. அதனால், பா.ம.க.,வில் நடக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு,” என்றார்.
இதுவும் அப்பா -- மகனுக்கு இடையில் இணக்கம் ஏற்படுவதற்கான அறிகுறி என்று, அக்கட்சியினர் கூறுகின்றனர்.