சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும்: கட்சியினரை குஷிப்படுத்திய இ.பி.எஸ்.,
சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும்: கட்சியினரை குஷிப்படுத்திய இ.பி.எஸ்.,
சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும்: கட்சியினரை குஷிப்படுத்திய இ.பி.எஸ்.,
ADDED : ஜூலை 12, 2024 05:11 AM

சென்னை: 'லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், பலமான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து, தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தி வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று காலையில் சிவகங்கை, வேலுார், மாலையில் திருவண்ணாமலை தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகளில் சிலர், 'பா.ஜ., கூட்டணி சார்பில், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி பிரசாரம் செய்தனர். நாம் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாதது பின்னடைவை ஏற்படுத்தியது. 'பூத்' கமிட்டிகள் சில இடங்களில் அமைக்கப்படவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை. கட்சியினரிடம் ஒருங்கிணைப்பு இல்லை' என தெரிவித்தனர்.
பின்னர், இ.பி.எஸ்., பேசியுள்ளதாவது:
கட்சியில் எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை. துரோகத்தை வீழ்த்தி விட்டோம். எம்.ஜி.ஆர்., கூட லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்தித்துஉள்ளார். அதன்பின் வந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தார். எனவே, லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், நாம் பலமான கூட்டணி அமைத்து, வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து, தேர்தல் பணியாற்ற வேண்டும். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுங்கள்.
உள்ளூர் பிரச்னைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்துங்கள். மக்களை சந்தியுங்கள். பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பின், சிறுபான்மையின மக்கள் கவனம் நம் மீது விழுந்துள்ளது. வரும் தேர்தலில், அவர்களும் நம் பக்கம் வருவர். நமக்கு ஓட்டளிப்பர். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.