குவாட்டருக்கு ரூ.10 உடன் குறைந்தபட்ச விலை: ரூ.150 கூடுதல் செலவுகளால் தடம் மாறும் 'குடி'மகன்கள்
குவாட்டருக்கு ரூ.10 உடன் குறைந்தபட்ச விலை: ரூ.150 கூடுதல் செலவுகளால் தடம் மாறும் 'குடி'மகன்கள்
குவாட்டருக்கு ரூ.10 உடன் குறைந்தபட்ச விலை: ரூ.150 கூடுதல் செலவுகளால் தடம் மாறும் 'குடி'மகன்கள்
ADDED : ஜூன் 21, 2024 01:08 AM

தமிழகத்தில், 4,830 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றைத் தவிர்த்து, சமீபகாலமாக கிளப் மற்றும் ஹோட்டல்களுக்கான எப்.எல்.,2 மற்றும் எப்.எல்., 3 லைசென்ஸ்களும் வாரி வழங்கப்படுகின்றன.
இவற்றால் ஆண்டுக்கு, 45,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடக்கிறது. இவற்றுக்கான மதுபானங்களை தயார் செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவையாக உள்ளன.
டாஸ்மாக் மதுவின் தரம் மிகவும் குறைந்து வருவதாகப் புகார்கள் குவிந்து வரும் நிலையில், அவற்றின் விலை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு ஏறிக்கொண்டே இருக்கிறது. குவாட்டரின் குறைந்தபட்ச விலையே, 140 ரூபாயாக உள்ளது. பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வைத்து, 150க்கு விற்கப்படுகிறது.
இதை வாங்கி, டாஸ்மாக் பார்களில் டம்ளர், தண்ணீர் பாட்டில், சைடிஷ் என, 200 ரூபாய்க்கு மேல் செலவாகி விடுவதாக, 'குடி'மகன்கள் குமுறுகின்றனர்.
தினக்கூலி வேலைக்கு செல்வோருக்கு, இவ்வளவு தொகை கொடுத்து தினமும் குடிக்க முடிவதில்லை. அதனால், மாற்று வழிகளில் குறைந்த தொகையில் கிடைக்கும் போதைகளை தேடுகின்றனர்.
இதனால், பின்தங்கிய சில மாவட்டங்களில் போலி மது விற்பனை அதிகளவில் நடக்கிறது. ஒரு பாக்கெட் சாராயம் 30 -- 50 ரூபாய்க்கு கிடைப்பதால், குடித்தே தீர வேண்டுமென போதைக்கு அடிமையான பலரும், இவற்றின் தீமை அறியாமல் வாங்கி குடிக்கின்றனர்; பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கு, அரசு தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எதுவுமே உறுதியானதாக இருப்பதில்லை.
மதுபானங்களில் கலப்படத்தையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்கவும், 'டெட்ரா' பாக்கெட்களில் மது விற்பனை செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக, கடந்த ஆண்டில் தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
டெட்ரா பாக்கெட் மது விற்பனைக்கு எதிராக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், அவற்றின் நன்மை, தீமை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை என்னவானது என்றும் தெரியவில்லை.
இந்நிலையில் தான், 'குடி'மகன்கள் தவறான போதைகளை தேடிச்சென்று உயிரிழப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கடுமையாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க, கம்ப்யூட்டர் பில்லிங் கொண்டு வரப்படும் என்று, இரண்டு ஆண்டுகளாக அமைச்சர் முத்துசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்று வரை வந்தபாடில்லை; இப்போது வரையிலும், டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும், 'பார்'களில் அதிக விலைக்கு விற்கும் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த முறைகேடுகளையும், கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது, எதிர்க்கட்சியினரால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
- நமது நிருபர் -