முதல்வர் பதவி கேட்கும் லிங்காயத் சமூகம்; காங்கிரஸ் மேலிடத்திற்கு புதிய தலைவலி
முதல்வர் பதவி கேட்கும் லிங்காயத் சமூகம்; காங்கிரஸ் மேலிடத்திற்கு புதிய தலைவலி
முதல்வர் பதவி கேட்கும் லிங்காயத் சமூகம்; காங்கிரஸ் மேலிடத்திற்கு புதிய தலைவலி
ADDED : ஜூலை 02, 2024 10:41 PM

கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில், லிங்காயத் சமூக ஓட்டுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், லிங்காயத் சமூகம் பா.ஜ.,வை ஆதரித்து வந்தது. முந்தைய பா.ஜ., ஆட்சியில் லிங்காயத் சமூகத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகம், 2ஏ இடஒதுக்கீடு கேட்டது. ஆனால், 2டி இட ஒதுக்கீடு தான் கிடைத்தது.
பா.ஜ., மீது லிங்காயத் சமூகத்தினர் அதிருப்தி அடைந்தனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற வைத்தனர். காங்கிரஸ் ஆட்சியில் தங்களுக்கு 2ஏ இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்பினர்.
ஆனால் ஆட்சி அமைந்து, ஒரு ஆண்டுக்கு மேலாகியும், 2ஏ இட ஒதுக்கீடு பற்றி சித்தராமையா அரசு, இதுவரை பேசவில்லை. இதற்கிடையில், காங்கிரசில், முதல்வர் பதவிக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, அந்த பதவியில் அமர துணை முதல்வர் சிவகுமார் காய் நகர்த்தி வருகிறார்.
ஆனால், முதல்வரின் ஆதரவு அமைச்சர்கள் விட்ட பாடாக இல்லை. சிவகுமாருக்கு பதிலாக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும். மாநில தலைவர் பதவியில் இருந்து, சிவகுமாரை மாற்ற வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, ஒக்கலிக சமூக மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள் கோரிக்கை விடுத்து மூக்கை நுழைத்தார். அதன்பின்னர் ஒவ்வொரு சமூக மடாதிபதிகளும், தங்கள் சமூகத்துக்கு துணை முதல்வர் அல்லது முதல்வர் பதவி வேண்டுமென கேட்க ஆரம்பித்து விட்டனர்.
குறிப்பாக லிங்காயத் சமூக மடாதிபதிகள், 'தங்கள் சமூகத்திற்கு, காங்கிரசில் முதல்வர் பதவி கிடைத்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சித்தராமையாவை மாற்றிவிட்டு வேறு ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுக்க நினைத்தால், லிங்காயத் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும்' என்று நிபந்தனை விதித்துள்ளனர்.
இது தவிர காங்கிரஸ் மாநில தலைவர் பதவியும், லிங்காயத் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால், காங்கிரஸ் மேலிடத்திற்கு புதிய தலைவலி ஏற்பட்டு உள்ளது.
அகில இந்திய வீரசைவ லிங்காயத் மகாசபையின் தலைவர் சாமனுார் சிவசங்கரப்பா. இவர் காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும் என ஆசைப்படுகிறார்.
காங்கிரஸ் மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சிவசங்கரப்பா, அவ்வப்போது தனது ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்.
லிங்காயத் சமூகத்தை பகைத்துக் கொண்டால், இந்த ஆட்சியை சுமுகமாக நடத்துவது கஷ்டம் என்றும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதாலும், காங்கிரஸ் மேலிடம் லிங்காயத் சமூகத்திற்கு ஏதாவது ஒரு முக்கிய பதவி கொடுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -