மாநில சுயாட்சியை பிறகு பேசலாம்; உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்க! முதல்வருக்கு காட்டமான கடிதம்
மாநில சுயாட்சியை பிறகு பேசலாம்; உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்க! முதல்வருக்கு காட்டமான கடிதம்
மாநில சுயாட்சியை பிறகு பேசலாம்; உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்க! முதல்வருக்கு காட்டமான கடிதம்
ADDED : மே 21, 2025 04:54 AM

கோவை: 'மாநில சுயாட்சியை பற்றி பிறகு பேசலாம். முதலில், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்கள்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கோவை மாநகராட்சி முன்னாள் ம.தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடித விபரம்:
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், உள்ளாட்சி அமைப்புகளில் மாநில அரசு தலையீடு பெருமளவில் உள்ளது; மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இது ஆரோக்கியமானதல்ல.
தி.மு.க., ஆட்சியில் இதுவரை, மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி இஷ்டத்துக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு சதவீதம் உயர்த்தி, அபராதமாக ஒரு சதவீதம் வரி போடப்படுகிறது.
பத்திரப்பதிவு துறையில் சொல்லவே வேண்டாம். சேவை கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அரசு துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இச்சூழலில், 14ம் தேதி நடந்த கோவை மாநகராட்சி கூட்டத்தில், சதுரடி கணக்கில், பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை, மாதாந்திர கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, சர்வாதிகாரத்தின் உச்சகட்டம்.
எந்த விவாதமுமின்றி, மக்களிடம் கருத்து கேட்காமல், தீர்மானம் நிறைவேற்றுவது எவ்வகையில் நியாயம்? உங்களுக்கு ஓட்டுப்போட்ட, ஓட்டுப்போடாத மக்களுக்கு எவ்வளவு சிரமம் கொடுக்க முடியுமோ, அத்தனையும் கொடுத்து விட்டீர்கள். இப்படித்தான், உள்ளாட்சி நிர்வாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாநில சுயாட்சி கேட்கும் முதல்வரே, முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் சுதந்திரம் கொடுங்கள். அதன்பின், மாநில சுயாட்சி பற்றி பேசலாம். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.