Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கள்ளச்சாராயத்திற்கு பெயர் போன கல்வராயன்மலை: அரசியல் கட்சிகள், போலீஸ், வனத்துறை அமோக ஆதரவு

கள்ளச்சாராயத்திற்கு பெயர் போன கல்வராயன்மலை: அரசியல் கட்சிகள், போலீஸ், வனத்துறை அமோக ஆதரவு

கள்ளச்சாராயத்திற்கு பெயர் போன கல்வராயன்மலை: அரசியல் கட்சிகள், போலீஸ், வனத்துறை அமோக ஆதரவு

கள்ளச்சாராயத்திற்கு பெயர் போன கல்வராயன்மலை: அரசியல் கட்சிகள், போலீஸ், வனத்துறை அமோக ஆதரவு

ADDED : ஜூன் 21, 2024 04:52 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையாக உள்ள கல்வராயன்மலை, 1095 சதுர கி.மீ., பரப்பு உள்ளது. சேலம் மாவட்டத்தில் பெரிய கல்வராயன், சின்ன கல்வராயன் மலைகளில், 120 மலை கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன கல்வராயன்மலையில், 150 கிராமங்கள் என, 270க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

அங்கு வன உயிரின பாதுகாப்பு, சமூக விரோத குற்றச்செயல்களை தடுக்க, கருமந்துறை, கரியகோவில், கரியாலுார் போலீஸ் ஸ்டேஷன்கள், 6 வனச்சரகங்கள் உள்ளன. இதில், பொட்டியம், மாயம்பாடி, மட்டப்பட்டு, கோமுகி, கைக்கான்வளவு, கல்லுார் உள்ளிட்ட ஆறுகள், ஓடைகள் உள்ளன. ஓடை பகுதிகளில் முகாமிடும் சாராய வியாபாரிகள், ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி ஆத்துார், தலைவாசல், சின்னசேலம், தும்பல், ஏத்தாப்பூர், கச்சிராயபாளையம், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகள் வழியே கடத்தி, அருகே உள்ள மாவட்டங்களில் விற்கின்றனர்.

சாராயம் காய்ச்சுவதற்கு தேவைப்படும் அழுகிய திராட்சை, வாழை, வெல்லம், கடுக்காய், உப்பு, சர்க்கரை, அடுப்பு, பிளாஸ்டிக், இரும்பு பேரல், குடம், லாரி டியூப் போன்றவற்றை, சேலம், ஆத்துார், கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள புரோக்கர்கள் வாயிலாக சேகரிக்கின்றனர். வனத்துறை, போலீசாரின் சோதனைச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள், 'கவனிப்பு' காரணமாக, வனப்பகுதிக்குள் எளிதாக சென்றுவிடுகின்றன. தொழிற்சாலை போன்று சாராயம் காய்ச்சும் இடத்தில், 10 முதல், 30க்கும் மேற்பட்ட பேரல்களில் ஊறல் போட்டு காய்ச்சுகின்றனர்.

மக்காச்சோளம், மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட விவசாய தோட்டங்களில் ஊறல் போட்டு பதுக்கி வைத்துள்ள பேரல்களை, சாராயம் காய்ச்சும் நேரத்துக்கு வெளியே எடுத்துச்செல்கின்றனர். கோடையின் போது வறட்சியால் நீர்நிலைகள் வறண்டன. தண்ணீர் உள்ள சில இடங்களில் மட்டும் சாராயம் காய்ச்சினர். ஒரு மாதமாக பெய்து வரும் கோடை மழையில் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் மீண்டும் சாராயம் காய்ச்சுவது சூடுபிடித்துள்ளது.

போலீசார், 'ரெய்டு'க்கு சென்று, ஊறல், அடுப்பு அழித்த சில நாட்களில் அதே இடத்தில் மீண்டும் சாராயம் காய்ச்சுவதும் தொடர்கிறது. அந்த இடங்களில், வனவிலங்குகளிடம் இருந்து தப்பிக்கவும், மற்ற நபர்கள் வராமல் இருக்கவும், நாட்டு துப்பாக்கியுடன் இத்தொழில் மேற்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. 2014 நவம்பரில், கல்வராயன்மலையில் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததை கண்டறிந்து, 12 பேரை, போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால், ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் ஏஜன்டாகவும், அவர்கள் ஆதரவில் சிலரும், போலீசார் ஆதரவுடனும், சாராயம் காய்ச்சும் தொழில், 'ஜோராக' நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஊறல் போட்ட இடத்தில் போலீசார் ஊறலை அழிக்கும் போது, அங்கு ஊறல் போட்டவர் குறித்து தகவல் தெரிந்தாலும், 'மேலிட' உத்தரவுக்கு பின் அடையாளம் தெரியாதவர் என வழக்கு பதிவு செய்வதோடு, பறிமுதல் செய்யும் ஊறல், சாராய அளவை குறைத்து கணக்கு காட்டுவதும் நடக்கும். கல்வராயன்மலையில், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், வனத்துறையினர் ஒருங்கிணைந்து, ரோந்து செல்வதில்லை. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் சாராயம் குடித்த, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த கோர உயிரிழப்புக்கு பின்பாவது, கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை முழுமையாக கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

காற்றில் பறந்த முதல்வர் உத்தரவு


கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து, சேலம் மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் ஆத்துார் மதுவிலக்கு டி.எஸ்.பி., சென்னகேசவன் தலைமையில், நான்கு தனிப்படை உட்பட 100 போலீசார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலையை சேர்ந்த, 200 போலீசார் என, 300 பேர் முகாமிட்டு ஊறல், சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டறிந்து வருகின்றனர்.
கடந்தாண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், 'கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும். 10581 என்ற கட்டணமில்லா எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம். இதற்கு மாவட்ட மதுவிலக்கு அலுவலகம், டி.எஸ்.பி.,க்கள், அவர்களின் வாட்ஸ்ஆப் எண்களை அறிவிக்க வேண்டும்.
புகார் மீதான நடவடிக்கை குறித்து மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் டி.ஜி.பி., கண்காணிக்க வேண்டும். இந்த நடவடிக்கை குறித்த வார அறிக்கையை, ஒவ்வொரு திங்கள் அன்று உள்துறை செயலர் வாயிலாக முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். கலெக்டர் தலைமையில் வார கூட்டம் நடத்த வேண்டும்' என, அறிவுறுத்தி இருந்தார். இவை எதையும் கடைபிடிக்காமல், முதல்வர் உத்தரவை காற்றில் பறக்க விட்டதன் விளைவே தற்போதைய பரிதாபத்திற்கு காரணம்!



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us