மத்திய அமைச்சர் நிர்மலா பெயரில் பணம் வசூலிப்பு?
மத்திய அமைச்சர் நிர்மலா பெயரில் பணம் வசூலிப்பு?
மத்திய அமைச்சர் நிர்மலா பெயரில் பணம் வசூலிப்பு?
ADDED : மே 20, 2025 05:10 AM

சென்னை : 'ஒருமுறை, 21,000 ரூபாய் முதலீடு செய்தால், வாரம், 4.50 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற போலி வீடியோக்களை, மோசடி கும்பல் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. 'பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, சைபர் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்ட போலி வீடியோக்களை, கடந்த சில தினங்களாக, சமூக வலைதளங்களில் மோசடி கும்பல் வெளியிட்டு வருகிறது. அந்த வீடியோ, அமைச்சர் பேசுவது போலவே இருப்பதால், பலர் ஏமாறும் அபாயம் உள்ளது.
வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது;
'குவான்டம் ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தில், அனைவரும் எளிதில் பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியர்கள் அதிகம் பேர், இதை விரும்பி பயன்படுத்த துவங்கி விட்டனர்.
இதில் ஒருமுறை, 21,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். வாரம், 4.55 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, இந்த வாய்ப்பு முன்னர் இருந்தது. தற்போது யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அரசு தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இம்மாதம் வரை மட்டுமே, இந்த திட்டத்தில் சேர முடியும். இப்போதே, 'லிங்'கை கிளிக் செய்து முதலீடு செய்து, பணம் சம்பாதியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'இதுபோன்று உலா வரும் போலி வீடியோக்களை நம்பி, யாரும் பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்' என, சைபர் துறை வல்லுநர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.