Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ சோம்பேறியாக வாழ்வதற்காக ஜீவனாம்சம் கேட்பதா? படித்த பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்

சோம்பேறியாக வாழ்வதற்காக ஜீவனாம்சம் கேட்பதா? படித்த பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்

சோம்பேறியாக வாழ்வதற்காக ஜீவனாம்சம் கேட்பதா? படித்த பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்

சோம்பேறியாக வாழ்வதற்காக ஜீவனாம்சம் கேட்பதா? படித்த பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்

UPDATED : மார் 21, 2025 04:01 AMADDED : மார் 21, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: நன்கு படித்து, நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கு தகுதியான பெண், சோம்பேறியாக வாழ்வதற்காக, தன் முன்னாள் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க முடியாது என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த ஒரு பெண், ஆஸ்திரேலியாவில் முதுநிலை பட்டம் முடித்து, திருமணத்துக்கு முன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் நல்ல வேலையில் இருந்துள்ளார்.

துஷ்பிரயோகம்


அதன்பின், திருமணமாகி, இரண்டு ஆண்டுகளிலேயே தன் கணவரைப் பிரிந்து, அவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

அவர் தன் மனுவில், 'கடந்த 2019 டிசம்பரில் திருமணம் முடிந்து சிங்கப்பூரில் வசித்தோம். கணவர் மற்றும் அவரது வீட்டாரின் கொடுமையால், 2021-ல் அவரை பிரிந்து, நகைகளை விற்று இந்தியா திரும்பினேன். எனக்கு எந்த வருமானமும் இல்லை. என் கணவர் நன்றாக சம்பாதித்து சொகுசாக வாழ்கிறார். அவரிடம் இருந்து ஜீவனாம்ச தொகை பெற்றுத்தர வேண்டும்' எனக் கூறி இருந்தார்.

அந்த பெண்ணின் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'இது, ஜீவனாம்ச சட்ட நடைமுறையை மிகக் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யும் செயல்.

'அந்த பெண் நன்கு படித்தவர்; வேலைக்கு போகாமல் இருந்து கொண்டு, அதையே காரணம் காட்டி பராமரிப்புத் தொகையை கோர முடியாது' என கூறினார். இருவரின் மனுக்களையும் விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவையும் டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

நீதிபதி சந்திரதாரி சிங், தன் உத்தரவில் கூறியதாவது:

மனைவி, குழந்தை, பெற்றோரைப் பராமரிப்பதற்கு உதவித் தொகையை வழங்க உத்தரவிடும் சட்டமானது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை துணைவர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டது; சோம்பேறித்தனத்தை அல்ல.

நன்கு சம்பாதிக்கும் திறன் உடைய, தகுதி வாய்ந்த ஒரு பெண், சோம்பேறியாக வாழ விருப்பம் கொண்டு ஜீவனாம்சம் கேட்க முடியாது.

தள்ளுபடி


கல்வியறிவு இல்லாமல், அடிப்படை வாழ்வாதாரத்திற்காக கணவரையே முழுமையாக நம்பி இருக்கும் மற்ற பெண்களைப் போல் இவர் கிடையாது.

திருமணத்துக்கு முன், ஆஸ்திரேலியாவில் படித்து துபாயில் நல்ல வேலையில் இருந்த இவர், தகுதியும் திறமையும் இருந்தும் இந்தியா திரும்பியதில் இருந்தே, எந்த வேலைக்கும் விண்ணப்பிக்காமல், சும்மாவே இருப்பது ஏன்? பரந்த உலக அறிவு பெற்ற அவர், தன் தன்னிறைவுக்கு நல்ல வேலையை தேடிக் கொள்ளலாம்.

அவரது தாயாருடன், பேஸ்புக் பதிவுகள் வழியில் நடந்த உரையாடலை பார்த்தால், அவர் தவறாக வழிகாட்டப்பட்டது போல் தெரிகிறது.

எனவே, நன்கு படித்த, நல்ல வருமானம் தரும் வேலை பார்த்த அனுபவம் உள்ள இந்த பெண், தன் கணவரிடமிருந்து ஜீவனாம்ச தொகையை பெறுவதற்காக சோம்பேறியாக இருக்கக் கூடாது என நீதிமன்றம் கருதுகிறது. எனவே, அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us