ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு: கட்சிகள் அதிர்ச்சி
ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு: கட்சிகள் அதிர்ச்சி
ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு: கட்சிகள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 11, 2025 03:31 AM

கோவை: இனி, 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஓட்டுச்சாவடி வாரியாக பணிபுரிய கூடுதலாக ஆட்கள் தேவைப்படும்; செலவினம் அதிகரிக்கும் என்பதால், தேர்தல் நடத்தும் அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
2026 சட்டசபை தேர்தலுக்கு முந்தைய வேலைகளை, தேர்தல் ஆணையம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. நுாறு சதவீதம் தவறில்லாத, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆதார் எண்களை பட்டியலில் இணைக்கும் பணி, வாக்காளர்களின் விருப்பத்துக்கேற்ப செய்யப்படுகிறது கடந்த லோக்சபா தேர்தலில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது.
இரண்டு கி.மீ., சுற்றளவுக்குள் ஓட்டுச்சாவடிகள் இருக்க வேண்டும்; அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்க நேரம் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால், 1,200 வாக்காளர்களுக்கு ஒன்று வீதம் ஓட்டுச்சாவடிகளை பிரிக்க, ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, ஓட்டுச்சாவடிகளை பிரித்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக எத்தனை இடங்களில் சாவடி அமைக்க வேண்டும், ஓட்டுச்சாவடிகள் அமைக்க போதுமான பள்ளி வகுப்பறைகள் இருக்கின்றனவா, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக எத்தனை ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரசு அதிகாரிகள் சேகரிக்கத் துவங்கி உள்ளனர்.
தேர்தல் நடத்தும் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'இரட்டை பதிவு மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை முழுமையாக நீக்கினால், பெரிய அளவில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை குறையும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரி வருகின்றனர்.
இச்சூழலில், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, 10 சட்டசபை தொகுதிகள் உள்ள ஒரு மாவட்டத்தில், 900 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க வேண்டியுள்ளது.
பிரிக்கப்படும் ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடிக்கான பொருட்கள் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் அதிகரிக்கும்; கூடுதல் செலவினம் ஏற்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பிரத்யேகமாக ஓட்டுச்சாவடி அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு செய்தால், ஓட்டுச்சாவடி பக்கம் இதுநாள் வரை எட்டிப் பார்க்காதவர்களும், வரும் தேர்தலில் ஓட்டளிப்பர்; ஓட்டுப்பதிவு அதிகரிக்கும்.
இப்படி தேர்தல் கமிஷனின் லேட்டஸ் அறிவுறுத்தல், இரு விதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்' என்றனர்.
அரசியல் கட்சியினர் கூறுகையில், 'வீதி, வீதியாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும்போது, 30 சதவீத வாக்காளர்கள் குறிப்பிட்ட இடங்களில் வசிப்பதில்லை. முதலில், பட்டியலை தவறில்லாமல் தயாரிக்க வேண்டும்.
வாக்காளர் எண்ணிக்கையை குறைத்து, கூடுதலாக ஓட்டுச்சாவடி அமைத்தால், தேர்தல் பிரிவினருக்கே வேலை அதிகமாகும். அரசியல் கட்சியினருக்கு பூத் கமிட்டிக்கு ஆட்கள் நியமிக்க வேண்டும்.
ஒரு கட்சிக்கு பூத் கமிட்டியே அஸ்திவாரம். வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பேசும் அளவுக்கு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடிக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் கட்சியினரை அனுப்ப வேண்டும். கட்சிகளுக்கு பூத் கமிட்டிக்கு ஒதுக்கும் செலவினம் கூடுதலாகும்' என்றனர்.