டிரம்ப் மிரட்டல்: மஸ்க் எச்சரிக்கை
டிரம்ப் மிரட்டல்: மஸ்க் எச்சரிக்கை
டிரம்ப் மிரட்டல்: மஸ்க் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 'தொழிலதிபர் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் பல ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை நிறுத்தினால், அரசுக்கு செலவு குறையும்' என மிரட்டல் விட்ட நிலையில், பதிலுக்கு எலான் மஸ்க், நாசா பயன்படுத்தி வரும் தன் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலத்தை சேவையில் இருந்து நீக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
உரசல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செலவை குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் சிறப்பு துறை உருவாக்கப்பட்டது.
இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் இருந்தார். இவருக்கும் டிரம்ப் அமைச்சரவையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
இதனால், சமீபத்தில் அரசு துறை தலைவர் பதவியிலிருந்து மஸ்க் விலகினார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் செனட் சபையில் புதிய செலவு மற்றும் வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார்.
இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்திற்கு தரப்படும் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை நிறுத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில், 'என் நிறுவனத்துக்கான அரசு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டால் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், 'டிராகன்' விண்கலத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கும்' என எச்சரித்தார்.
பின்வாங்கல்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதற்கு டிராகன் விண்கலத்தை 40,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் கீழ் நாசா பயன்படுத்துகிறது. டிராகனை நிறுத்தினால், உலக நாடுகள் பங்கேற்றுள்ள சர்வதேச விண்வெளி திட்டம் பாதிக்கப்படும்.
இந்நிலையில் மஸ்கின் சமூக வலைதள பக்கத்தில், பயனர் ஒருவர் நிதானத்தை கடைப்பிடிக்கும்படி கூறினார்.
அதை ஏற்ற மஸ்க், 'நல்ல அறிவுரை; நாங்கள் டிராகன் விண்கலனை நிறுத்த மாட்டோம்' என முடிவில் இருந்து பின்வாங்கினார்.