Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ மாம்பழத்தை தொடர்ந்து பருத்தியிலும் பிரச்னை: தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பம்

மாம்பழத்தை தொடர்ந்து பருத்தியிலும் பிரச்னை: தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பம்

மாம்பழத்தை தொடர்ந்து பருத்தியிலும் பிரச்னை: தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பம்

மாம்பழத்தை தொடர்ந்து பருத்தியிலும் பிரச்னை: தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பம்

ADDED : ஜூன் 27, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
சென்னை: மாம்பழத்தை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில்பருத்தி கொள்முதல் பிரச்னை தலைதுாக்கியுள்ளதால், தமிழக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

அரியலுார், பெரம்பலுார், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில், 4.39 லட்சம் ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் 4.61 லட்சம் டன் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

தேசிய அளவில் உள்ள பருத்தி நுாற்பாலைகளில், 55 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளன. இந்த ஆலைகள் தொடர்ந்து இயங்க ஆண்டுதோறும் 1.20 கோடி 'பேல்' பருத்தி தேவைப்படுகிறது. இதில், 95 சதவீத தேவையை குஜராத், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள்தான் பூர்த்தி செய்கின்றன.

தேசிய பருத்தி வாரியம் நிர்ணயிக்கும் விலையில், தமிழகத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவது இல்லை. இதனால், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவது கிடையாது. இருப்பினும், பருத்தி சாகுபடியை அதிகரிக்கும் பணிகளை, வேளாண் துறை மேற்கொண்டு வருகிறது.

பலன் தரும் பருத்தி சாகுபடி திட்டம் என்ற பெயரில், விவசாயிகளுக்கு 2024 - 25ம் ஆண்டு 11 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. நடப்பாண்டு இத்திட்டத்தை செயல்படுத்த, 12.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கோடை உழவு நேரத்தில் நெல்லுக்கு மாற்றாக, 1 லட்சம் ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி நடந்துள்ளது. ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாகவும், போக்குவரத்து செலவு அதிகம் எனக் கூறியும், தனியார் தரப்பில், ஒரு டன் பருத்தி, 50,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், வெளிமாநிலங்களில் ஒரு டன் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக, டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், அதிகாரிகள், கமிஷன் ஏஜன்டுகளுடன் வாக்குவாதத்தில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். மாம்பழம் விவசாயிகள் பிரச்னையை தொடர்ந்து, டெல்டாவில் பருத்தி பிரச்னை தலைதுாக்கியுள்ளதால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

தமிழக விவசாயிகள், பருத்தி சாகுபடியில் இருந்து பிற பயிர்கள் சாகுபடிக்கு மாறி வருவது, நுாற்பாலைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே, பருத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க, வேளாண் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். அதேநேரத்தில், உற்பத்தி செய்த பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

டெல்டா மாவட்டங்களில் பருத்தியை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மற்றும்தனியார் கூட்டணி அமைத்து, இச்செயலில் ஈடுபடுகின்றனர். இதனால், பிரச்னை தலைதுாக்கியுள்ளது. நுாற்பாலைகள் வாயிலாக கொள்முதல் விலையை அறிவித்து, அதன்படி பருத்தியை கொள்முதல் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில், மூன்று நாட்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பிரச்னை நடந்து வரும் நிலையில், அதை அரசு கண்டும் காணாமலும் உள்ளது. பிரச்சனை அதிகரிப்பதற்குள் தீர்வு காண வேண்டும்.

அவர் கூறினார்.

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


'பருத்தி பஞ்சுக்கு உரியவிலை கிடைக்க, தி.மு.க.,அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் ஜூலை 1ம் தேதி,திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us