Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ எதற்கும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை: செங்கோட்டையன் தவிர்ப்புக்கு இபிஎஸ் பதில்

எதற்கும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை: செங்கோட்டையன் தவிர்ப்புக்கு இபிஎஸ் பதில்

எதற்கும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை: செங்கோட்டையன் தவிர்ப்புக்கு இபிஎஸ் பதில்

எதற்கும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை: செங்கோட்டையன் தவிர்ப்புக்கு இபிஎஸ் பதில்

ADDED : மார் 16, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்பதை, அவரிடம் தான் கேட்க வேண்டும்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக,கோவை அன்னுாரில் விவசாய அமைப்புகள் சார்பில் கடந்த 9ம் தேதி பாராட்டு விழா நடந்தது. இதன் அழைப்பிதழ் மற்றும் மேடையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். கூடவே, இது தொடர்பாக தன் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து பழனிசாமி - செங்கோட்டையன் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கோவை கொடிசியா அரங்கில் நடந்தது. அந்நிகழ்வுக்கு முன் கூட்டியே வந்திருந்த செங்கோட்டையன், பழனிசாமி வருவதற்கு முன்பாகவே கிளம்பி விட்டார்.

அதேபோல, கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடல் நடத்தினார், கட்சியின் பொதுச்செயலரான பழனிசாமி. அப்போது ஈரோட்டு மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் செங்கோட்டையனும் கலந்து கொண்டார். ஆனால், மற்ற நிர்வாகிகளுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடிய பழனிசாமி, கடைசி வரை செங்கோட்டையனுடன் பேசவே இல்லை. கடைசியாக நிகழ்ச்சி முடியும்போது மட்டும், நன்றி சொல்லும்விதமாக செங்கோட்டையன் பெயர் குறிப்பிட்டார்.

இப்படி ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், சந்திப்பதையோ பேசுவதையோ இருவரும் தவிர்த்து வருகின்றனர்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நடந்த பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சிக்கு, வழக்கமான கேட் வழியாக சபைக்கு வராத செங்கோட்டையன், அ.தி.மு.க., உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தபோது, அவர்களோடு வெளிநடப்பு செய்யவில்லை. முன்கூட்டியே வெளியே சென்று விட்டார். அன்றைய தினம், எதிர்கட்சித் தலைவர் அறையில் நடந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. கூடவே அன்றைய தினமே, தமிழக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துப் பேசினார். இதுகுறித்த எந்தத் தகவலும் பழனிசாமிக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.

இதனால், இருவருக்குமிடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சட்டசபை வளாகத்தில் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:

'பழனிசாமியை சந்திப்பதை, நீங்கள் ஏன் தவிர்க்கிறீர்கள்' என, செங்கோட்டையனிடம் தான் பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும். எதற்காக அப்படி நடக்கிறது என்பது அவருக்குதான் தெரியும். தனிப்பட்ட முறையில் நடக்கும் பிரச்னைகள் குறித்து பேச வேண்டாம்.

அதேபோல செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை ஏன் தனித்து சந்தித்தார் என்பது குறித்தும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.

அ.தி.மு.க., சுதந்திரமாக செயல்படும் கட்சி. தி.மு.க.,வை போல, அடிமை ஆட்கள் இருக்கும் கட்சி அல்ல. நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், யாரையும் எதற்கும் எதிர்பார்ப்பது இல்லை. நான் சாதாரண தொண்டன்; தலைவர் அல்ல. தி.மு.க.,வை போல், அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் கிடையாது; இது குடும்ப கட்சியும் கிடையாது.

சர்வாதிகார ஆட்சியை, அ.தி.மு.க., நடத்தவில்லை. அ.திமு.க.,வில் இருப்பவர்கள் சுதந்திரமாக செயல்படலாம்; எந்த தடையும் இல்லை. எங்களின் ஒரே எதிரி தி.மு.க., மட்டுமே; மற்ற கட்சிகள் எதிரிகள் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us