ஜெகன்னாதர் ரத யாத்திரையில் மிரண்டு ஓடிய யானைகள்
ஜெகன்னாதர் ரத யாத்திரையில் மிரண்டு ஓடிய யானைகள்
ஜெகன்னாதர் ரத யாத்திரையில் மிரண்டு ஓடிய யானைகள்

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த ஜெகன்னாதர் ரத யாத்திரையில், யானைகள் மிரண்டு ஓடியதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
ஒடிஷாவின் புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவிலின் பிரசித்தி பெற்ற ரத யாத்திரை நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்கம், குஜராத், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஜெகன்னாதர் கோவில்களிலும் ரத யாத்திரை நடந்தது.
அந்த வரிசையில், குஜராத்தின் ஆமதாபாத் ஜமால்பூரில், 400 ஆண்டுகள் பழமையான ஜெகன்னாதர் கோவிலின், 148வது ரத யாத்திரை கோலாகலமாக நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அலங்கரிக்கப்பட்ட 17 யானைகள், 100 வாகனங்கள் அணிவகுத்து செல்ல இந்த ரத யாத்திரை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாத்திரையில் பங்கேற்றனர்.
காடியா கேட் என்ற பகுதியை ரதம் நெருங்கியபோது, பலத்த இசையுடன், மக்கள் உற்சாக குரல் எழுப்பினர். அதீத சத்தத்தால் மிரண்ட ஆண் யானை ஒன்று, சாலையோரம் இருந்த தடுப்புகளை உடைத்து ஓடியது.
அதன் பின்னாலேயே மேலும் இரண்டு யானைகள் ஓடின. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மயக்க ஊசியின்றி, ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் யானைகளையும் பாகன்களே கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மிரண்டு ஓடிய யானைகளை தவிர்த்து மற்ற யானைகளுடன் யாத்திரை நடந்தது. இதனால், ரத யாத்திரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.