Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/தேர்தல் திருவிழா: விக்கிரவாண்டியில் விவசாய வேலைகள் முடக்கம்

தேர்தல் திருவிழா: விக்கிரவாண்டியில் விவசாய வேலைகள் முடக்கம்

தேர்தல் திருவிழா: விக்கிரவாண்டியில் விவசாய வேலைகள் முடக்கம்

தேர்தல் திருவிழா: விக்கிரவாண்டியில் விவசாய வேலைகள் முடக்கம்

UPDATED : ஜூலை 05, 2024 01:28 AMADDED : ஜூலை 04, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கட்சியினரின் அன்பான கவனிப்பால், விவசாய வேலைகளுக்கு யாரும் செல்ல ஆர்வம் காட்டவில்லை. இதனால், ஆட்கள் பற்றாக்குறையால் கிராமங்களில் விவசாயம் முடங்கியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு, வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இருப்பினும், தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆளுங்கட்சியான தி.மு.க., வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் தலைமையில் 8 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை கொண்ட மெகா தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது.

இவர்கள், தொகுதியின் 116 கிராமங்களில் உள்ள 276 ஓட்டுச்சாவடிகளை தங்களுக்குள் பிரித்து கொண்டு, வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததை தொடர்ந்து, 25 அமைச்சர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும், அவர்களது ஆதரவாளர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல, மாநிலம் முழுவதும் இருந்து பா.ம.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர். அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்களும், முன்னணி தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளனர்.

கட்சியின் நிறுவனர் ராமதாசின் சொந்த மாவட்டம் என்பதால், விக்கிரவாண்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் பா.ம.க.,வினர் தீவிரமாக உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பணிகளை தங்களுக்கே உரிய பாணியில் வேகப்படுத்தி வருகின்றனர்.

தி.மு.க., - பா.ம.க., கட்சியினருடன் அவர்களது கூட்டணி கட்சியினரும் தினசரி விக்கிரவாண்டிக்கு படையெடுத்தவாறு உள்ளனர். இதனால், விக்கிரவாண்டி தொகுதியில் எங்கே பார்த்தாலும் கரை வேட்டிகளாக காட்சியளிக்கிறது.

அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக, காலையில் ஆரம்பித்து இரவு வரை வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். மேலும், வீதி வீதியாக சென்று தெருமுனை பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், சந்து பொந்துகளில் எல்லாம் மைக் சத்தம் ஓயாமல் ஒலித்து கொண்டே இருக்கிறது.

மேலும், மூன்று வேளையும் விதவிதமான உணவுகள், குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணி, கைநிறைய கவர் என கவனிப்பு உச்சக்கட்டமாக உள்ளது. இன்னொரு பக்கம், அதிகாரிகளின் கண்களில் மண்ணை துாவி விட்டு, இரவு நேரத்தில் பணம், பரிசு பொருட்கள் வினியோகமும் நடந்து வருவதால் விக்கிரவாண்டி தொகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

அரசியல் கட்சியினரின் அன்பான கவனிப்பாலும், உபசரிப்பாலும், தேர்தல் பிரசாரம் துவங்கியதில் இருந்து விவசாய வேலைகளுக்கு செல்ல யாரும் ஆர்வம் காட்டவில்லை. கட்சியினருடன் சென்று கொடி பிடித்தால், கோஷமிட்டால், பணம், பிரியாணி எளிதில் கிடைப்பதால் விவசாய வேலைக்கு ஆட்கள் செல்வது குறைந்து விட்டது.

இதன் காரணமாக, கிராமங்களில் நாற்று விடுவது, நடவு நடுவது, களை எடுப்பது, உரம் போடுவது உள்ளிட்ட விவசாய பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஏற்கனவே, நுாறு நாள் வேலையால், விவசாயத்துக்கு ஆட்கள் வருவது குறைந்துள்ள நிலையில், தற்போது இடைத்தேர்தல் திருவிழாவால் விவசாய பணிகள் முற்றிலுமாக முடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

-நமது நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us