அமைச்சர்கள், மா.செ.,க்கள் மீது தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தி
அமைச்சர்கள், மா.செ.,க்கள் மீது தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தி
அமைச்சர்கள், மா.செ.,க்கள் மீது தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தி
ADDED : ஜூன் 01, 2025 03:57 AM

சென்னை: அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளால், சட்டசபை தேர்தல் பணியில் பின்னடைவு ஏற்படும் என்பதை கணித்துள்ள தி.மு.க., மேலிடம், அதை சரிகட்ட, மண்டல பொறுப்பாளர்களுக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளது.
அதன்படி, தொகுதிதோறும் கட்சியினரை சந்தித்து, 'ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் எதுவும் செய்யவில்லை என்ற கோபம் உங்களுக்கு இருக்கும். அதற்காக மன்னிப்பு கேட்கிறோம்' எனக்கூறி வருகின்றனர்.
ஆதரவு
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த, 2011 முதல் பத்து ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அந்த காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் என, அனைத்திலும் அ.தி.மு.க.,வினரே இருந்தனர்.
அப்படி இருந்தும், தி.மு.க.,வினர் கட்சிப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். பத்து ஆண்டுகளுக்குப் பின், ஆட்சிக்கு தி.மு.க., வந்ததால், உள்ளாட்சிகளில் பதவிகள், அதிகாரிகள் ஆதரவு, அரசு சார்ந்த ஆதாயங்கள் கிடைக்கும் என, கட்சியின் ஒன்றிய, பகுதி, நகர நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், பல அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகளாகியும் சொந்த கட்சியினருக்கு எந்த உதவியும் செய்யாமல், தங்களின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அடிமட்ட நிர்வாகிகள், அங்குள்ள மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள், கட்சி தலைமை மீது, கோபத்தில் உள்ளனர். இதை உளவுத்துறை வாயிலாக, ஆட்சி மேலிடமும் அறிந்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே உள்ளதால், அடிமட்ட கட்சியினரின் ஆதரவை பெற, மண்டல பொறுப்பாளர்களை தி.மு.க., களமிறக்கி உள்ளது.
தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து, பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இவர்கள், தங்கள் மண்டலத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிவாரியாக கூட்டம் நடத்தி, மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள், ஒன்றிய, வார்டு செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேசி, கருத்துகளை கேட்கின்றனர்.
அதில் பலரும், 'மாவட்ட அமைச்சர், மாவட்ட செயலர் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அரசு துறைகளில் பணிபுரியும் உறவினர், நண்பர்களுக்கு இடமாறுதல் கேட்டு சென்றால்கூட, பணம் வாங்கிக் கொண்டுதான் செய்து தந்தனர்' என்றும் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களை, பொறுப்பாளர்கள் சமாதானம் செய்கின்றனர்.
கோபம் குறையும்
சென்னையில் நடந்த கூட்டங்களில் பேசிய மண்டல பொறுப்பாளர் ராஜா, 'ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் எதுவும் செய்யவில்லை என்ற கோபம் உங்களுக்கு இருக்கும். அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை மனதில் வைத்து, சட்டசபை தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது. கட்சி தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற்றதும், உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்' என, உறுதி கூறியுள்ளார்.
இதே ரீதியிலேயே கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மண்டலங்களில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மன்னிப்பு கோருவது வாடிக்கையாகி உள்ளது.
இப்படி தொகுதிவாரியாக நடக்கும் கூட்டங்களில், மண்டல பொறுப்பாளர்கள் நேரடியாக மன்னிப்பு கோரும்போது, கட்சி மீது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இருக்கும் கோபம் குறையும் என்பதாலேயே, இப்படியொரு திட்டம் போட்டு மண்டல பொறுப்பாளர்கள் செயல்படுவதாக கட்சியினர் கூறுகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.