தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிவு: பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரிப்பு
தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிவு: பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரிப்பு
தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிவு: பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரிப்பு
ADDED : ஜூன் 05, 2024 02:30 AM

லோக்சபா தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ள அ.தி.மு.க., 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அமோக வெற்றி பெற்ற போதிலும், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் சரிவை கண்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணி, 2004 லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதன்பின், தோல்வியிலிருந்து மீண்ட அ.தி.மு.க., 2014 லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
மேலும், 2011, 2016 சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சட்டசபை தேர்தலில், பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்திருந்த நிலையில், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகி, தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது. பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதால், சிறுபான்மையினர் ஓட்டுகள் வரும்; வெற்றி வசமாகும் என, அ.தி.மு.க., தலைமை நம்பியது. ஆனால், அக்கட்சிக்கு தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தையே தந்துள்ளன.
விருதுநகர் தொகுதியில் மட்டும், தி.மு.க., கூட்டணிக்கு கடும் சவாலை அளித்தது. மற்ற தொகுதிகளில், அ.தி.மு.க., பெரும் போட்டியை தரவில்லை. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும், கன்னியாகுமரி தொகுதியில் நான்காம் இடத்தையும் பெற்று, பெரும் சரிவை கண்டுள்ளது.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திகழ்கிறோம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி வந்த நிலையில், அக்கட்சி 12 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
அ.தி.மு.க., ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு அதிக அளவில் சென்றுள்ளன. இதன் காரணமாக, பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில், மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளில், பா.ஜ., இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., ஆகியவை இடம் பெற்றிருந்தன. அந்த தேர்தலில் அ.தி.மு.க., 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 30.27 சதவீத ஓட்டுகளைப் பெற்றது.
பா.ஜ., ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு, 3.66 சதவீதம்; பா.ம.க., ஏழு இடங்களில் போட்டியிட்டு, 5.42 சதவீதம்; தே.மு.தி.க., நான்கு இடங்களில் போட்டியிட்டு, 2.19 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றன.
இந்த தேர்தலில், அ.தி.மு.க., 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது. தே.மு.தி.க., நான்கு தொகுதிகளில், 2.59 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. பா.ஜ., 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 11.24 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
தி.மு.க., கூட்டணியில், 2019 தேர்தலில் 23 இடங்களில் களம் இறங்கிய தி.மு.க., 32.76 சதவீத ஓட்டுகளை பெற்றது. இந்த தேர்தலில், தி.மு.க., 22 இடங்களில் போட்டியிட்டு, 26.93 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது; அதன் ஓட்டுகளும் குறைந்துள்ளன.
இந்த தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் குறைந்த நிலையில், பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது, நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு திசை மாறியதையே காட்டுகிறது.
- நமது நிருபர் -