டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு சங்கடம்
டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு சங்கடம்
டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு சங்கடம்
ADDED : ஜூன் 01, 2025 12:47 AM

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்துார் குறித்து வெளிநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க, 51 எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளன. சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்ட பலர் இந்த குழுக்களுக்கு தலைமை தாங்கி சென்றுள்ளனர்.
ஆப்பரேஷன் சிந்துார் எப்படி நடந்தது; இதில் பாகிஸ்தானுக்கு இழப்பு எவ்வளவு; பயங்கரவாதிகளை பாகிஸ்தான் எப்படி ஆதரிக்கிறது என்பது உட்பட பல விஷயங்களை இந்த எம்.பி.,க்கள் வெளிநாட்டு தலைவர்களிடம் விளக்கி கூறியுள்ளனர்.
டில்லி திரும்பியதும் இவர்களது பயணம் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இந்த குழுக்களுடன் வெளியுறவு துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர். இந்த அதிகாரிகள் அறிக்கைகளை தயார் செய்வர். ஒவ்வொரு குழுவும் ஒரு அறிக்கையை தயாரிக்கும்.
இந்த அறிக்கைகள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என்றும், இதன் மீது விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எம்.பி.,க்கள் குழுக்கள் தயாரித்த அறிக்கைகளை மொத்தமாக ஒரு புத்தகமாகவும் தயாரிக்க பிரதமர் ஆலோசித்து வருகிறாராம். இந்த புத்தகம் உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய துாதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுமாம்.
இந்த குழுக்களால் காங்கிரசுக்கு பெரிய அடி. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரசைச் சேர்ந்த சசி தரூர், சல்மான் குர்ஷித் ஆகியோர், மத்திய அரசை ஆதரித்து பேசி வருவது ராகுலுக்கு கோபத்தையும், கட்சிக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.