உறுப்பினர்களை சேர்க்காவிட்டால் நடவடிக்கை; கட்சியினருக்கு முதல்வர் எச்சரிக்கை
உறுப்பினர்களை சேர்க்காவிட்டால் நடவடிக்கை; கட்சியினருக்கு முதல்வர் எச்சரிக்கை
உறுப்பினர்களை சேர்க்காவிட்டால் நடவடிக்கை; கட்சியினருக்கு முதல்வர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 09, 2025 03:39 AM

''புதிய உறுப்பினர்கள் சேர்க்கையின் போது, பொதுமக்களிடம் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. உறுப்பினர் சேர்க்கையை முழுமையாக முடிக்காத நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
30 சதவீதம்
தி.மு.க., மாவட்டச் செயலர்கள், சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், நேற்று முன்தினம் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடந்தது.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், ஏற்கனவே இருக்கிற தி.மு.க., உறுப்பினர்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடும் வாக்காளர்கள் தவிர, கூடுதலாக, 30 சதவீதம் வாக்காளர்களை, கட்சியின் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
புதிய உறுப்பினர்களை சேர்க்க, யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. கடந்த நான்காண்டு ஆட்சியில், மக்களுக்கு செய்து முடித்த நல்ல திட்டங்களையும், சாதனைகளையும், வாக்காளர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
பொறுமையாக பதில்
அப்போது ஆட்சியின் நிறை, குறை குறித்து, பொதுமக்கள் விவாதிக்க முன்வரலாம். தவறான புரிதல் காரணமாக, நிறைய கேள்விகளும் கேட்கப்படலாம்.
அவர்கள் என்ன கேட்டாலும், அதற்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். பொதுமக்களிடம் எக்காரணத்தை கொண்டும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.
தேவையில்லாமல் வாய் தவறி பேசி, அது சமூக வலைதளங்களில் பரவினால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும். எனவே, ஒவ்வொரு வார்த்தையையும் எச்சரிக்கையோடு பேச வேண்டும். பெண் வாக்காளர்களிடம், கண்ணியத்துடன் பேசி, புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
ஒரு பூத்தில் மொத்தம் பதிவாகும் ஓட்டுகளில், தி.மு.க., ஏற்கனவே வாங்கியுள்ள ஓட்டுகளுடன் கூடுதலாக, 30 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும்.
அப்போது தான் மொத்தம் பதிவாகும் ஓட்டுகளில், தி.மு.க., பெரும்பான்மை ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற ஏதுவாக இருக்கும். இந்த புது பார்முலாவை, அனைவரும் உண்மையாக கடைப்பிடித்தால், தி.மு.க., ஏழாவது முறை ஆட்சி அமைப்பது உறுதி.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில், முழுமையாக முடிக்காமல் இருக்கும் நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -