பா.ஜ.,வுக்கு விரைவில் செயல் தலைவர்! நியமனம்: தேர்தல் பணிகளை கையாள வியூகம்
பா.ஜ.,வுக்கு விரைவில் செயல் தலைவர்! நியமனம்: தேர்தல் பணிகளை கையாள வியூகம்
பா.ஜ.,வுக்கு விரைவில் செயல் தலைவர்! நியமனம்: தேர்தல் பணிகளை கையாள வியூகம்
ADDED : ஜூலை 27, 2024 11:26 PM

நட்டாவுக்கு பதிலாக புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து அறிவிக்கும் வரையில், கட்சியின் அன்றாட செயல்பாடுகளை தொய்வின்றி நடத்தி செல்வதற்காக, செயல் தலைவரை விரைவில் நியமிக்க பா.ஜ., தலைமை முடிவு செய் துள்ளது.
பா.ஜ.,வின் தேசிய தலைவராக நட்டா இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதமே முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும், புதிய தலைவரை நியமிக்கும் வரையில் இடைக்கால ஏற்பாடாக, அவருடைய பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தான், லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, அவர் மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
ராஜ்யசபாவின் சபை முன்னவர் பதவியிலும், அவர் அமர்த்தப்பட்டுள்ளார். மூத்த அமைச்சர் பியுஷ் கோயல், தேர்தலில் வெற்றி பெற்று லோக்சபா எம்.பி.,யாகி விட்டதால், அவர் கையாண்ட மிக முக்கிய பொறுப்பான, சபை முன்னவர் பதவியை நட்டா தற்போது கவனித்து வருகிறார்.
இந்த பணிகளில் கவனம் செலுத்துவதற்கே நட்டாவுக்கு நேரம் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, தன் வேலைப்பளுவை குறைக்க வேண்டுமென்று அவரும் எதிர்பார்க்கிறார்.
கட்சித் தலைவர், சுகாதாரத்துறை அமைச்சர், ராஜ்யசபா சபை முன்னவர் என முக்கிய பதவிகளை, ஒரே நபர் கையாள வேண்டியுள்ளது. இதனால், அவருக்கான பணிச்சுமை அதிகமாகிவிட்டது.
இதனால், கட்சியின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை, மூத்த தலைவர்கள் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப ஆலோசனைகள் நடந்து வந்தன.
மிக முக்கியமான மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறஉள்ளன.
லோக்சபா தேர்தலில் கட்சிக்கு சற்று பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இந்த தேர்தல்களை மிகவும் கவனமாக கையாள வேண்டியுள்ளது.
இந்த தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக, நிர்வாகிகள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டுமெனில், புதிய தலைவர் நியமனம் என்பது அவசியம்.
இந்த பின்னணியில் தான், இரு தினங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ., தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் பங்கேற்ற முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நடவடிக்கை
அதில், புதிய தலைவர் நியமனம் குறித்த பேச்சு பிரதானமாக இருந்துள்ளது. நட்டாவுக்கு பதில் புதிய தலைவரை நியமிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி அதை செய்து கொள்ளலாம்.
அதேசமயம், சட்ட சபை தேர்தல் நடவடிக்கைகளை கையாளுவது மற்றும் அன்றாட கட்சி நடவடிக்கைகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரையில் இடைக்கால ஏற்பாடாக, செயல் தலைவராக ஒருவரை நியமிக்கலாம் என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமனம் செய்யப்பட்டபோது, அவர் பா.ஜ.,வின் தலைவர் பதவியில் இருந்தார். அப்போதுதான், செயல் தலைவராக நட்டா நியமிக்கப்பட்டார்.
கட்சியின் நடவடிக்கைகளுக்கு எந்த சிக்கலும் இருக்கக் கூடாது என்பதற்காக, இவ்வாறு செயல் தலைவர் பார்முலாவை பா.ஜ., தலைமை அமல்படுத்துகிறது.
பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இடையிலான ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் கேரளாவில் நடைபெறவுள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மிக முக்கியமான குழுவின் கூட்டம் இது.
காரணம், கட்சியின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை எப்போதும், இதுபோன்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தான், ஆர்.எஸ்.எஸ்.,சிடம் அதிகாரப்பூர்வமாக பா.ஜ., தலைவர் சமர்பிப்பார்.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்திற்கு முன், செயல் தலைவர் பதவிக்கான பெயர் அறிவிக்கலாமா அல்லது அந்த கூட்டம் முடிந்த பின் அறிவிக்கலாமா என்பது குறித்த தீவிர ஆலோசனையில் பா.ஜ., தலைமை ஈடுபட்டுள்ளது
- நமது டில்லி நிருபர் -.