தி.மு.க.,வுக்கு எதிரான பிரசார பீரங்கியாக களம் இறக்கப்படுகிறார் அண்ணாமலை
தி.மு.க.,வுக்கு எதிரான பிரசார பீரங்கியாக களம் இறக்கப்படுகிறார் அண்ணாமலை
தி.மு.க.,வுக்கு எதிரான பிரசார பீரங்கியாக களம் இறக்கப்படுகிறார் அண்ணாமலை
ADDED : செப் 21, 2025 04:17 AM

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஏழு மாதங்களே இருப்பதால், தி.மு.க., அரசின் மீதான குற்றச்சாட்டுகளை மக்களிடம் தெரிவிப்பதுடன், மத்திய அரசின் திட்டங்களை பொது வெளியில் சேர்க்கும் பணியில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, கட்சி மேலிடம் ஈடுபடுத்த உள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மட்டுமே, 'இண்டி' கூட்டணி பலமாக இருந்தது. அதற்கு ஏற்ப, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மத்தியில் பா.ஜ.,வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனதற்கு, தி.மு.க.,வுக்கு முக்கிய பங்கு உள்ளது.
அதற்கு, பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., பிரிந்து சென்றதே, முக்கிய காரணமாக பா.ஜ., தலைமையால் பார்க்கப்படுகிறது. கூட்டணி முறிவுக்கு, அப்போதைய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா மலையே காரணம் என, அவர் மீது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டினார்.
இருந்தாலும், அது குறித்து கவலைப்படாத அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் ஒரு கூட்டணியை கட்டமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்தார். 'அந்த கூட்டணி எப்படியும் ௧௦ தொகுதிகளிலாவது நிச்சயம் வெற்றி பெறும்' என, தேசிய தலைமைக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்.
ஆனால், பா.ஜ., கூட்டணி 18.4 சதவீத ஓட்டுகளை பெற்றாலும், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இது, அண்ணாமலை மீது தேசிய தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அடுத்தாண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், லோக்சபா தேர்தலுக்காக தமிழக பா.ஜ., அமைத்த கூட்டணி போதாது என கட்சியின் தேசிய தலைமை முடிவெடுத்தது.
இதற்காக, மீண்டும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, பா.ஜ., தரப்பில் அணுகினர். அப்போது, 'அண்ணாமலை தலைவராக இல்லாத பா.ஜ., வுடன் கூட்டணி அமைக்கலாம்' என பழனிசாமி தரப்பில் தெரிவித்தனர்.
அதனால், அண்ணாமலைக்கு பதிலாக, தமிழக பா.ஜ., தலைவராக பழைய அ.தி.மு.க.,காரரான நாகேந்திரனை நியமித்தனர். இது, கட்சியில் அண்ணாமலைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இருந்தபோதும், தன்னுடைய தி.மு.க., எதிர்ப்பை கொஞ்சமும் குறைக்காமல் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், முன்பு போ ல கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினார். குடும்ப சுற்றுப்பயணம், பொது நிகழ்ச்சிகள் என காலத்தைக் கழித்தார்.
இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் இருந்த முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனை பா.ஜ., தேசிய தலைமை அங்கீகரிக்க மறுத்தது. இதனால், இருவரும் கூட்டணியில் இருந்து விலகி னர்.
இது, பா.ஜ., கூட்டணிக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக, பா.ஜ., தேசிய தலைமைக்கு சிலர் எடுத்துச் சொல்ல, அவர்கள் அண்ணாமலை மீது மீண்டும் கோபம் அடைந்தனர்.
இதற்கிடையே, தமிழக பா.ஜ.,வின் சிந்தனை அமர்வு கூட்டத்துக்காக தமிழகம் வந்த, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, காரசார விவாதங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், மொத்த பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்படுத்தும் வகையில், அண்ணாமலையை தி.மு.க.,வுக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் களம் இறக்கிவிட பா.ஜ., தேசிய தலைமை முடிவெடுத்துள்ளது. அதற்காக, பிரசார பயண திட்டம் வகுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டா ரங்கள் கூறின.
- நமது நிருபர் -