அமித் ஷாவை சந்தித்த பின் முடிவெடுக்கலாம்; தினகரனை கேட்டுக்கொண்ட அண்ணாமலை
அமித் ஷாவை சந்தித்த பின் முடிவெடுக்கலாம்; தினகரனை கேட்டுக்கொண்ட அண்ணாமலை
அமித் ஷாவை சந்தித்த பின் முடிவெடுக்கலாம்; தினகரனை கேட்டுக்கொண்ட அண்ணாமலை
ADDED : செப் 23, 2025 04:31 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மாலை, சென்னை அடையாறில் இருக்கும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வீட்டுக்கு சென்று, அவரை சந்தித்தார். மாலை 6:00 மணிக்கு தினகரன் வீட்டுக்கு சென்ற அண்ணாமலை, இரவு 9:00 மணிக்கு மேல் திரும்பி உள்ளார்.
இது குறித்து, அ.ம.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் குறித்து தான் இருவரும் பேசி உள்ளனர்.
கூட்டணியை விட்டு வெளியேறிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, தினகரனிடம் அண்ணாமலை கேட்டுள்ளார்.
அதற்கு, 'மறுபரிசீலனை செய்ய நானும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் தயார். ஆனால், சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக யார் இருப்பார்? பழனிசாமி என்றால், அது சரிபட்டு வராது.
'தொகுதிகளை பகிர்ந்தளிப்பதில் கூட குறைவு இருக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் எங்களால் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது.
'பழனிசாமியை எதிர்த்து அ.ம.மு.க.,வை துவங்கி உள்ளோம். என்னோடு கூட இருப்பவர்கள் அனைவரும், பழனிசாமி என்ற ஒற்றை நபருக்கு எதிராக கட்சியில் இருப்போர் தான். அப்படி இருக்கையில், அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்றால், தே.ஜ., கூட்டணியில் நாங்கள் இருக்க முடியாது.
'கூட்டணியில் இருந்து விலகியதும், என்னையும், பன்னீர்செல்வத்தையும் த.வெ.க., தரப்பில் தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றனர்.
'உடனே, எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான். மீண்டும் கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால், எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்க வேண்டும்' என, அண்ணாமலையிடம் தினகரன் தெள்ளத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார்.
இதையடுத்து, 'உங்கள் இருவரையும் கூட்டணியில் இருந்து அனுப்பி வைத்ததே நான் தான் என பா.ஜ., தலைமையில் நினைக்கின்றனர்.
'அதனால், பா.ஜ., கூட்டணிக்கு எதிராக நீங்கள் எழுப்பும் வேகமான குரல், எனக்குத்தான் பா.ஜ., தலைமையிடம் சிக்கலை ஏற்படுத்தும். அதனால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, நானே நேரம் வாங்கி தருகிறேன்.
'உங்களுக்கு இருக்கும் மனக் குறைகளை அவரிடம் சொல்லி, தீர்வு கேளுங்கள். அதுவரை, கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவும் பேசாதீர்கள்' என தினகரனிடம் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு ஒப்புக் கொண்ட தினகரன், 'பழனிசாமிக்கு எதிரான என் விமர்சனங்கள் தொடரும். ஆனால், கூட்டணி என ஏற்பட்டு விட்டால், அதன் பின், பழனிசாமி குறித்து பேச மாட்டேன்.
'கூட்டணி அமையாவிட்டாலும், இருவரும் நல்ல நட்புடன் இருக்கலாம். பன்னீர்செல்வமும் அதே மனநிலையில் இருப்பதால், அவருக்கும் பா.ஜ., மேலிடம் என்ன சொல்கிறது என்பதை அமித் ஷா வாயிலாகவே சொல்லச் சொல்லுங்கள்' என அண்ணாமலையிடம் கூறியுள்ளார்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அண்ணாமலை, 'அனைத்து தகவல்களையும் முழுமையாக அமித் ஷா கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.
'பின், அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வரும்; டில்லி சென்று அவரை பாருங்கள். தெளிவு கிடைத்ததும், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால் போதும்' என்று தினகரனிடம் கூறியுள்ளார். கூடவே, தினகரன் வீட்டிலேயே இரவு சாப்பாட்டை முடித்த அண்ணாமலை அங்கிருந்து கிளம்பி சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, விரைவில் டில்லி செல்லவிருக்கும் அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி, தினகரனுக்கு அமித் ஷாவை சந்திப்பதற்கான அப்பாயின்மென்ட் வாங்கி கொடுப்பார் என தெரிகிறது.
தினகரன் டில்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்த பின், தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -