தினகரன் விலகலுக்கு நான் காரணமா? புரியவில்லை என்கிறார் நாகேந்திரன்
தினகரன் விலகலுக்கு நான் காரணமா? புரியவில்லை என்கிறார் நாகேந்திரன்
தினகரன் விலகலுக்கு நான் காரணமா? புரியவில்லை என்கிறார் நாகேந்திரன்
ADDED : செப் 09, 2025 04:11 AM

திருநெல்வேலி: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலர் தினகரன், அதற்கு நான் தான் காரணம் என சொல்லி இருக்கிறார். எந்த அடிப்படையில் அப்படி சொல்லியிருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை,” என, திருநெல்வேலியில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுடன் கருத்து வேறுபாடு கிடையாது. அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த பின், மத்திய அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலின்படி செயல்படுகிறேன்.
'தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான்' என, நான் அறிவிக்கவில்லை. அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின், அறிவிக்கப்பட்டது. இதில் என் பங்கு எதுவும் இல்லை.
திருநெல்வேலியில் நடந்த பூத் கமிட்டி மாநாட்டில், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமித் ஷாவை வைத்துக் கொண்டே, 'முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்; அவருடைய வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்' என்றார்.
வரும் சட்டசபை தேர்தலிலும், தினகரன் எங்களோடுதான் தேர்தலை சந்திப்பார் என ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
அப்போதெல்லாம், கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர், திடுமென கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தினகரன், அதற்கு நான் தான் காரணம் என சொல்லி இருக்கிறார். எந்த அடிப்படையில் அப்படி சொல்லியிருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. அ.தி.மு.க.,வில் பிளவுபட்டுள்ள தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் கருத்து; இதைத்தான், சொல்லி வருகிறேன்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியாக இருப்பதால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பா.ஜ., பக்கம் வந்தாலும் ஏற்க முடியாது.
பன்னீர் செல்வம் பிரதமரை சந்திக்க விரும்பி என்னிடம் சொல்லி இருந்தால் அப்பாயின்ட் மென்ட் வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று தான் சொன்னேன். இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.