'ஏர்போர்ட்' தரவுகள் திடீரென மறைப்பு: வருகை விபரங்களை இனி பார்க்க முடியாது
'ஏர்போர்ட்' தரவுகள் திடீரென மறைப்பு: வருகை விபரங்களை இனி பார்க்க முடியாது
'ஏர்போர்ட்' தரவுகள் திடீரென மறைப்பு: வருகை விபரங்களை இனி பார்க்க முடியாது
ADDED : செப் 11, 2025 01:27 AM

நாடு முழுதும், விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணியர் வருகையை பார்ப்பதற்கான அனுமதியை, விமான நிலைய ஆணையம் ரத்து செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமான நிலையங்களின் தரவுகளை அறிந்து கொள்ள, aai.aeroஎன்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது; இது விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதில் இந்திய விமான நிலையங்கள் தொடர்பான தகவல், டெண்டர், மாநிலம் வாரியாக, மாதாந்திர பயணியர் விபரங்கள் போன்றவை இடம்பெறும்.
விமான நிறுவனங்கள், அதில் உள்ள தரவுகள் அடிப்படையில் புதிய மார்கத்தில் விமானங்களை இயக்குதல் தொடர்பான முடிவுகளை எடுக்கும். ஒவ்வொரு மாதம் இறுதியில், விமான நிலையங்கள் வாரியாக, உள்நாடு மற்றும் சர்வதேச பயணியர் வருகை குறித்த விபரங்களை, ஆணையம் இணையதளத்தில் வெளியிடும்.
இதற்கு பெயர், இ -மெயில் முகவரி போன்ற விபரங்களை சமர்ப்பித்து, தரவுகளை தரவிறக்கம் செய்யலாம். கடந்த சில வாரங்களாக, இதற்கான அனுமதியை, விமான நிலைய ஆணையம் ரத்து செய்துள்ளது.
இனி அமைச்சக அதிகாரிகளை தவிர, மற்ற யாரும் பார்க்க முடியாது. இது விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம், தனியார் விமான நிலையங்கள், தங்கள் இஷ்டத்துக்கு, பயணியர் வருகை குறித்த தரவுகளை பதிவேற்றம் செய்து வருகின்றன. எது உண்மை என தெரியாமல் பலர் குழம்பி வருகின்றனர்.
இது குறித்து, விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர் எச்.உபையதுல்லா கூறியது:
மாநிலங்களுக்கு இடையிலான விமான போக்குவரத்து, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பல விமான நிறுவனங்கள், உள்ளுர் நகரங்களுக்கான சேவைகளை அதிகரித்து வருகின்றன. 'ஒரு விமான நிலையத்தில், அதிக 'டிமாண்ட்' உள்ளது. எனவே, விமானங்களை அதிகரியுங்கள்' என அழுத்தம் தர, மாதாந்திர பயணியர் வருகை குறித்த தரவுகள் அவசியம்.
ஆனால், இந்த விஷயங்களில், விமான நிலைய ஆணையம், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஏ.ஏ.ஐ., அதிகாரிகளை தவிர்த்து, தரவுகளை மற்றவர்கள் பார்க்க முடியாமல் செய்திருப்பது, தனியார் விமான நிலையங்களை பெரிதாக காட்ட ஏற்படுத்தப்பட்ட பிம்பம் போல் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.