அரசு அறிவித்த திட்டங்களை கைவிடுவது நெடுஞ்சாலைத்துறைக்கு கைவந்த கலை!
அரசு அறிவித்த திட்டங்களை கைவிடுவது நெடுஞ்சாலைத்துறைக்கு கைவந்த கலை!
அரசு அறிவித்த திட்டங்களை கைவிடுவது நெடுஞ்சாலைத்துறைக்கு கைவந்த கலை!
ADDED : ஜூலை 11, 2024 05:59 AM

கோவைக்கு வெவ்வேறு காலகட்டங்களில் அறிவிக்கப்பட்ட ஒன்பது திட்டங்களை, காரணமின்றி மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ள கோவையில், மக்கள் போக்குவரத்துத் திட்டங்கள் இல்லாததால், சென்னையை விட வாகன அடர்த்தியும், அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகளால், பல்வேறு ரோடுகளில் பாலங்கள் கட்டப்படுகின்றன; ரோடுகளும் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
ஆனால் போதிய அகல மின்றியும், தேவையான இடங்களில் ஏறுதளம், இறங்குதளம் இல்லாமலும் கட்டப்பட்டுள்ள இந்த பாலங்களால், நகருக்குள் எங்குமே போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
மக்களை பற்றி கவலையில்லை
சில தனியார் கட்டடங்களைக் காப்பாற்றும் நோக்கிலும், சுயலாபம் பெறும் வகையிலும், தொலைநோக்கின்றி, பல லட்சம் மக்களின் நலனைப் புறக்கணித்து, இந்த பாலங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வடிவமைத்துக் கட்டியுள்ளனர். அதேபோல, நிரந்தரத் தீர்வுக்கான மாற்று முயற்சிகளையும், இந்தத் துறை அதிகாரிகள் எடுப்பதேயில்லை.
கோவைக்கு சம்பாதிப்பதற்காக மட்டுமே, மாறுதல் வாங்கி வரும் வெளியூர் அதிகாரிகள் பலரும், 'இந்த ஊர் எக்கேடு கெட்டால் என்ன; நமக்கு வருமானம் வந்தால் போதும்' என்ற மனநிலையில்தான் பணியாற்றுகின்றனர்.
நிலம் கையகப்படுத்துவது, கட்டடங்களை அகற்றுவது, பொறியியல் சவால்களை எதிர்கொள்வது போன்ற பணிகளை, தட்டிக் கழித்து விடுகின்றனர். ரோடு சீரமைப்பு என்ற பெயரில், ரோட்டின் மீது ரோடு போட்டு, பணம் எடுப்பதிலேயே குறியாகவுள்ளனர். இத்தகைய அதிகாரிகளால்தான், கோவையில் இந்தத் துறையின் பல திட்டங்கள் கைவிடப்படுவது தொடர்கதையாகவுள்ளது.
இதில், மேட்டுப்பாளையம் பை பாஸ் திட்டம், மிக முக்கியமானது. ஏழெட்டு ஆண்டுகளாக, இந்தப் பணியைச் செய்வதாகக் கூறி, காலத்தைக் கடத்திவிட்டு, மீண்டும் அதை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குத் தள்ளி விட்டது, மாநில நெடுஞ்சாலைத்துறை. காரமடை கிழக்கு பை பாஸ், காரமடை மேற்கு பை பாஸ் திட்டங்களும், இப்படி இந்தத் துறையால் கைவிடப்பட்டுள்ளன.
மாற்றுப்பாதையும் மாயம்
எதற்கும் உதவாமலிருக்கும் காந்திபுரம் மேம்பாலத்தில், நுாறடி ரோடு மற்றும் பாரதியார் ரோட்டில் இறங்குதளம், காந்தி புரம் சுரங்கப்பாதை ஆகிய திட்டங்களையும், இந்தத் துறை இன்ஜினியர்கள் கைகழுவி விட்டனர்.
கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ததைக் காரணம் காட்டி, இரு ஊர்களுக்கு இடையிலான மாற்றுப்பாதை திட்டத்தையும் கைவிட்டுள்ளனர். அதேபோல, அன்னுார் தெற்கு வழி பை பாஸ் (கரியாம்பாளையம்-அவிநாசி ரோடு-சத்தி ரோடு) திட்டம், அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஐந்து சுரங்கப்பாதைகள் அமைப்பது ஆகிய திட்டங்களையும் கைவிட்டு விட்டனர்.
இவற்றை கைவிடுவது பற்றி, மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுவிடம் தகவல் தெரிவித்து ஒப்புதல் கூட பெறுவதில்லை. அதிகாரி ஒருவரால் வடிவமைக்கப்படும் திட்டம், அதே துறையின் மற்றொரு அதிகாரியால் கைவிடப்படுகிறது. மாநகராட்சி, மாநகர போலீஸ் என எந்தத் துறை அதிகாரிகளிடமும் இதுபற்றி கலந்து ஆலோசிப்பதில்லை.
கைவிட்டதில் கண்ணுக்குத் தெரிவது ஒன்பது திட்டங்கள்தான்; இன்னும் எத்தனை திட்டங்கள் கருவாகவே, காகிதத்திலேயே காலமாகிப் போனதோ தெரியவில்லை.
-நமது நிருபர்-