நாய்க்கடி தொல்லை தாங்க முடியவில்லை; கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க தயாராகும் மக்கள்
நாய்க்கடி தொல்லை தாங்க முடியவில்லை; கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க தயாராகும் மக்கள்
நாய்க்கடி தொல்லை தாங்க முடியவில்லை; கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க தயாராகும் மக்கள்

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அல்லது அரசுக்கு எதிரான மக்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற, தனி அலுவலர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், 22ம் தேதி கூட உள்ள கிராம சபாவை புறக்கணிக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
பல மாவட்டங்களில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.
தனி அலுவலர்
திருப்பூர், வெள்ளக் கோவில், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில், தெருநாய்கள், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை கடிப்பதால் அவை இறக்கின்றன.
'இறக்கும் கால்நடைகளுக்கு அந்தந்த கிராம ஊராட்சி நிதியில் இருந்து, இழப்பீடு வழங்க வேண்டும்' என, கடந்தாண்டு அக்., 2ல் நடந்த கிராம சபை கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 27 கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும், கடந்த, ஜன., 26ல் நடந்த கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது, உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அந்தந்த வட்டாரத்தில் உள்ள துணை பி.டி.ஓ.,க்களுக்கு கிராம ஊராட்சிகளை நிர்வகிக்கும் தனி அலுவலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிறைவேற்ற தயக்கம்
தெருநாய்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து இழப்பீடு வழங்குவது தொடர்பாக, கடந்த, ஜன., 26ல் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் வழங்குமாறு, விவசாயிகள் நிர்பந்தித்து வருகின்றனர்.
ஊராட்சி தலைவர்கள் இருந்தவரை, எவ்வித தயக்கமுமின்றி அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆனால், நிர்வாகத்தில் தனி அலுவலர்கள் பொறுப்பேற்ற பின், அரசுக்கு அழுத்தம் தரும் அல்லது அரசுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற தயக்கம் காண்பிக்கின்றனர்.
இது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இழப்பீடு கிடைக்காவிடில், வரும், 22ம் தேதி நடக்கவிருக்கும் கிராம சபை கூட்டத்தில், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், கருப்புக்கொடி ஏந்தி, கால்நடைகளுடன் சென்று, கிராம சபா கூட்டத்தை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர்.