3 ஆண்டுகளாகியும் கோரிக்கை நிறைவேறல; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
3 ஆண்டுகளாகியும் கோரிக்கை நிறைவேறல; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
3 ஆண்டுகளாகியும் கோரிக்கை நிறைவேறல; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
UPDATED : ஜூலை 08, 2024 12:39 AM
ADDED : ஜூலை 08, 2024 12:35 AM

சென்னை: தி.மு.க., அரசு பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், பழைய ஓய்வூதிய திட்டம்.
சரண் விடுப்பு ரத்து தொடர்பாக, எந்த அறிவிப்பும் வெளியிடப்படா தது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக, அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வலியுறுத்தல்
தமிழக அரசு தற்போது நடைமுறையில் உள்ள, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டு உள்ள, சரண் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைளை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக, கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தையும் அறிவித்தன.
அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று அவர்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேசிய முதல்வர், நிதி நிலைமை சரியானதும், கோரிக்கை களை படிப்படியாக நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிந்து, கடந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. கூட்டத்தில், துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கை தொடர்பாக, முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று, எதிர்பார்த்தனர்.
ஆனால், அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தன் பதிலுரையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அரசின் பரிசீலனையில் உள்ளது என்று மட்டும் தெரிவித்தார்.
இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் போராட்டம்
சரண் விடுப்பு தொடர்பாகவும், அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தலைமை செயலக சங்க நிர்வாகிகள் கூறுகை யில், '2017 செப்டம்பரில், ஒன்றுபட்ட சக்தியாக போராட்ட களம் கண்டு, ஊதிய மாற்றத்தை சங்கங்கள் பெற்றன. தற்போது, கொள்கை முடிவு என்று காலம் தாழ்த்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசு மறுத்து வருகிறது.
'எனவே, தமிழக அரசை நிர்பந்திக்கும் வகையில், மீண்டும் அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் என்பதை உறுதி செய்வதற்கான இயக்கத்தில், விரைவில் ஒன்றிணைவோம்' என்றனர்.
வாக்குறுதிகள் அளித்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவர் என எதிர்பார்த்த நிலையில், பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் சம்பிரதாயமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கவில்லை. அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என, ஆலோசித்து வருகிறோம்.
ப.குமார்,
மாநில தலைவர், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்