ADDED : ஜூன் 16, 2024 12:49 AM

கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், ஒரு முக்கிய கூட்டம் நடந்தது. இதில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு தலைவர்கள் என பலர் பங்கேற்றனர்.
'நாடு முழுதும், ஒவ்வொரு அமைப்பின் கீழும், எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அனைத்து வழக்குகள் குறித்தும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகிய மூன்றும் தனித்தனியாக ஒரு அட்டவணையை அமைச்சரிடம் அளித்தன. அவற்றில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த அனைத்து விபரங்களும் இருந்தன; தமிழகத்திலிருந்து, எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.
அனைத்தையும் பார்த்த அமித் ஷா, 'எந்த ஒரு வழக்கையும் தாமதம் செய்ய வேண்டாம்; அடுத்த கட்ட நடவடிக்கையை தொடருங்கள்' என, உத்தரவிட்டாராம்.
நிதி அமைச்சகத்திற்கு கீழ் அமலாக்கத்துறை வந்தாலும், வெளிநாட்டு பண விவகாரம் இருந்தால், அதில் உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்டுள்ளது என்பதால், அமலாக்கத்துறை இயக்குனர் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.
'தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அரசியல் தொடர்பான வழக்குகளில் பா.ஜ., அவசரப்படாது' என, ஒரு கருத்து நிலவியது. அதை பொய்ப்பிக்கும் வகையில், அமித் ஷா உத்தரவிட்டுள்ளாராம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, போதைப் பொருள் விவகாரம், மணல் கொள்ளை என, அரசியல்வாதிகளுக்கு எதிராக உள்ள அனைத்து வழக்குகளும் இனி வேகமெடுக்கும். ஒரு சில ரெய்டுகளும் நடக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.