Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி: அ.தி.மு.க.,விடம் பா.ம.க., ரகசிய பேச்சு

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி: அ.தி.மு.க.,விடம் பா.ம.க., ரகசிய பேச்சு

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி: அ.தி.மு.க.,விடம் பா.ம.க., ரகசிய பேச்சு

அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி: அ.தி.மு.க.,விடம் பா.ம.க., ரகசிய பேச்சு

ADDED : மார் 14, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
சென்னை : அன்புமணியை மீண்டும் ராஜ்யசபா எம்.பி., யாக்க, அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சூசகமாக தெரிவித்தார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று, பேட்டியளித்த ராமதாசிடம், 'ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக முயற்சி செய்கிறீர்களா?' என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''அது ரகசியம். ஆனால், தி.மு.க.,விடம் கேட்க மாட்டோம்,'' என்றார்.

கடந்த 2019ல் அ.தி.மு.க., ஆதரவில், ராஜ்யசபா எம்.பி.,யான அன்புமணியின் பதவி, வரும் ஜூலை 24ல் முடிகிறது. அப்போது தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்ய சபா எம்.பி., பதவிகளுக்கு தேர்தல் நடக்கஉள்ளது. அதில் தி.மு.க., அணி நான்கு இடங்களிலும், அ.தி.மு.க., இரண்டு இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது.

கடந்த, 2024 லோக்சபா தேர்தலின்போது ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக, அ.தி.மு.க., வாக்குறுதி அளித்ததாக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். ஆனால், 'அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறுத்தார்.

இதையடுத்து, அ.தி.மு.க., ஆதரவோடு அன்புமணியை மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக்க, பா.ம.க., களமிறங்கி உள்ளது.

கடந்த பிப்ரவரி 17ம் தேதி சேலத்தில் பழனிசாமியை, பா.ம.க., சட்டசபை குழு தலைவர் ஜி.கே.மணி சந்தித்துப் பேசினார். உறவினர் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சந்தித்த மணி, கூடவே அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குவது குறித்து பேசியதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி., பதவி தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடப்பதை சூசகமாக, தன்னுடைய பேட்டி வாயிலாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் பேசியபோது, 'கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் வெளிப்படையாக கூட்டணி பேச்சு நடத்தினார் ராமதாஸ். ஆனால், கடைசி நேரத்தில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து விட்டார்.

'ஆனாலும், வரும் சட்டசபை தேர்தலில் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் வெற்றி பெற, பா.ம.க., ஆதரவு தேவை. இரு கட்சிகளிடையே கூட்டணி அமையும் வாய்ப்புள்ளது. 'அதனால், இந்த சூழலை பயன்படுத்தி, பா.ம.க., தலைவர் அன்புமணியை மீண்டும் ராஜ்ய சபா எம்.பி.,யாக்க, அவருடைய தந்தையும், கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் விரும்புகிறார். அதைத்தான் தன்னுடைய பேட்டி வாயிலாக சூசகமாக அவர் தெரிவித்திருக்கிறார்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us